பாஜகவை வீழ்த்த மதச்சார்பற்ற அணிகள் ஓரணியில் திரள வேண்டும்: பிரகாஷ் காரத்

மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்த ஜனநாயக, மதச்சார்பற்ற அணிகள் ஓரணியில் திரள வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்.

மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்த ஜனநாயக, மதச்சார்பற்ற அணிகள் ஓரணியில் திரள வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்.
தூத்துக்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் 18 முதல் 22 ஆம் தேதி வரை விசாகப்பட்டிணத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னோட்டமாக அனைத்து மாநிலங்களிலும் மாநில மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக அரசு மதவாத சக்திகளை தூண்டுவதை கண்கூடாகக் காணமுடிகிறது.
மத்திய அரசின் தாராளமயமாக்கல் கொள்கையால், சமுதாயத்தில், அரசியலில், பொருளாதாரத்தில் மிகுந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாஜக அரசின் மூன்றாண்டுகால தவறான பொருளாதாரக் கொள்கையால் விவசாய நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை ஆகியவை ஏற்பட்டுள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள், பெரு முதலாளிகளுக்கு மட்டுமே அவர்களது கொள்கை சாதகமாக அமைந்துள்ளது. பொருளாதாரம் மந்தமான நிலையை அடைந்துள்ளது.
தேர்தலின்போது அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றால் சிறு, குறு தொழில்கள் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளன. ஊழலை ஒழிப்பதாகக் கூறி பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால், பஞ்சாப் நேஷனல் வாங்கி மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியான நீரத் மோடி, வெளிநாட்டில் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதன்மூலம், பாஜக அரசு ஊழலற்ற அரசு என்பதை நிரூபிக்க முடியாது.
மேலும், மிகப்பெரிய ஊழலாக ரபேல் போர் விமானம் வாங்கியதை கூறமுடியும். காங்கிரஸ் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்துவிட்டு, விமான உதிரிபாகங்களை அணில் அம்பானி நிறுவனத்திடம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
மத்திய அரசு மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியால், மக்கள் ஆங்காங்கே பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் போராட்டங்களை தீவிரப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உழைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளுக்கு எதிராகப் போராட வேண்டும்.
ஜனநாயக, மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, சமூக ஆர்வலர்கள், அமைப்புகள் உதவியோடு ஜனநாயக உரிமையை மீட்டெடுக்க வேண்டும். இடதுசாரி ஒற்றுமையைப் பலப்படுத்துவதோடு, மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த அனைத்து ஜனநாயக, மதச்சார்பற்ற கட்சிகள், அமைப்புகள் ஓரணியில் திரள வேண்டும். தமிழகத்தில் அரசியல் சூழல் மாறிக்கொண்டே உள்ளது. திராவிட கட்சிகளில் ஒன்று தேக்க நிலையில் உள்ளது. ஒன்று சீரழிவை நோக்கி உள்ளது என்றார் அவர்.
பேட்டியின்போது, மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் கே.எஸ். அர்ஜூணன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com