விவசாயம், தொழில் துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநில மாநாட்டில் வலியுறுத்தல்

தமிழகத்தில் விவசாயம், தொழில் துறைகளுக்கு முன்னுரிமை அளித்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என தூத்துக்குடியில் சனிக்கிழமை

தமிழகத்தில் விவசாயம், தொழில் துறைகளுக்கு முன்னுரிமை அளித்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என தூத்துக்குடியில் சனிக்கிழமை தொடங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது மாநில மாநாடு தூத்துக்குடியில் சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட மாநாட்டுக் கொடியை தூத்துக்குடி முன்னாள் மாவட்டச் செயலர் பி. இசக்கிமுத்து பெற்றுக்கொண்டார். இதேபோல, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட தியாகிகள் சுடர் பெறப்பட்டு மாநாடு நடைபெற்ற இடத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து, மாநாட்டுக் கொடியை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வே. மீனாட்சிசுந்தரம் ஏற்றி வைத்தார். மூத்த நிர்வாகி பி. சம்பத் பொது மாநாட்டுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு மாநாடு தொடங்கியது. கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா. முத்தரசன், சிபிஐ (எம்-எல்) லிபரேசன் மாநிலச் செயலர் எஸ். குமாரசாமி,  எஸ்.யு.சி.ஐ. (சி) மாநிலச் செயலர் ஏ. ரங்கசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 
மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன், சுதந்திரப் போராட்ட வீரரும், கட்சியின் மூத்த நிர்வாகியுமான என். சங்கரய்யா,  மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன் எம்பி,  உ. வாசுகி,  அ. செளந்திரராஜன், பாலகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் நூர் முகமது,  க. கனகராஜ் உள்ளிட்ட 648 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.
முதல்நாளான சனிக்கிழமை, மறைந்த தலைவர்களுக்கும், கட்சி மூத்த நிர்வாகிகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு, தமிழகத்தில் விவசாயம், தொழில் வளர்ச்சி ஆகியவை பின்னடைவை சந்தித்து வருவதாகவும், அந்த துறைகளுக்கு முன்னுரிமை அளித்து கூடுதல் நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதவிர, ஒடிஸாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன் வீடுமீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, பிரதிநிதிகள் மாநாடு நடத்தப்படுகிறது. 20 ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com