தூத்துக்குடியில் விற்பனைக்கு குவிந்த பொங்கல் பண்டிகை பொருள்கள்!

பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (ஜன.14) கொண்டாடப்படும் நிலையில், பொங்கலுக்கு தேவையான கரும்பு, வாழைத்தார், மஞ்சள் குலை

பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (ஜன.14) கொண்டாடப்படும் நிலையில், பொங்கலுக்கு தேவையான கரும்பு, வாழைத்தார், மஞ்சள் குலை, பனங்கிழங்கு, வண்ண கோலப்பொடிகள் உள்ளிட்ட பொருள்களை பொதுமக்கள் வாங்கி செல்வதால் தூத்துக்குடியில் பொங்கல் பொருள்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.  
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை, புதுப்பானையில் பொங்கலிட்டு மஞ்சள் குலை, கரும்பு ஆகியவற்றை படைத்து கொண்டாடுவது வழக்கம். பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடும் நிலையில், தூத்துக்குடியில் தற்போது பொங்கல் பொருள்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.  தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் சிக்னல் அருகில் மதுரை,  கரூர்,  சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கரும்புகள் கொண்டு வந்து விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட நிகழாண்டு விளைச்சல் அதிகம் என்றாலும்,  விலையும் கடந்த ஆண்டை காட்டிலும் உயர்ந்துள்ளது. கரும்பு கட்டு ஒன்று ரூ.350முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு ரூ. 300 முதல் ரூ. 350 வரையே விற்பனை செய்யப்பட்டது. இருந்த போதும் விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆட்டோ, வேன், கார்  உள்ளிட்ட வாகனங்களில் தங்கள் உறவுகளுக்கு பொங்கல் படி கொடுக்க உற்சாகத்துடன் வாங்கி செல்கின்றனர்.
ராமநாதபுரம்,  தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள பனங்கிழங்குகள் 25 கிழங்குகள் உள்ள கட்டு ரூ.80முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. 
கடந்த ஆண்டு 25 கிழங்குகள் உள்ள கட்டு ரூ. 60 முதல் ரூ. 70-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுதவிர,  தூத்துக்குடி புறநகர் பகுதிகளான புதுக்கோட்டை,  கோரம்பள்ளம்,  ஆத்தூர்,  ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள் மார்க்கெட்டுக்கு வந்த வண்ணம் உள்ளன. 
இதில், கதலி தார் ரூ.450 முதல் ரூ.470 வரையும்,  ரஸ்தாலி ரூ.550 முதல் ரூ.570 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. நாட்டு வாழைத்தார் ரூ. 850-க்கு விற்கப்படுகிறது. வறட்சி,  சூறைக்காற்று போன்ற காரணங்களால் வாழைத்தார் வரத்து குறைவாகவே காணப்பட்டது.
பூசணிக்காய்,  தக்காளி,  கத்தரிக்காய்,  முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கனிகளின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. சாலையோரங்களில் பொங்கல் பூ என்று அழைக்கப்படும் புங்கை பூக்கள்,  பனை ஓலைகள்,  பல வண்ண கோலப்பொடிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
புதுமனத் தம்பதிகள் தலைபொங்கலிட பித்தளை பாத்திரங்கள் ரூ.500முதல் ரூ.2,000 வரை விற்பனையாகிறது. 
ஏராளமானோர் பொங்கல் சீர் கொடுக்க பொங்கல் பொருள்களை வாங்கிச் செல்வதால் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும்,  அனைத்துப் பொருள்களும் கடந்தாண்டைவிட அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com