காணும் பொங்கல்: அனுமதியின்றி கடலுக்கு படகில் சுற்றுலா சென்றால் கடும் நடவடிக்கை

காணும் பொங்கலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி கடலுக்கு படகு மூலம் சுற்றுலா சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.

காணும் பொங்கலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி கடலுக்கு படகு மூலம் சுற்றுலா சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. மகேந்திரன்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் காணும் பொங்கல் கொண்டாடும் இடங்களான 21 பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் எந்த பகுதியிலும், படகு சவாரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதி இன்றி காணும் பொங்கல் கொண்டாட படகு மூலம் கடலுக்கு சுற்றுலா சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக கடந்த ஆண்டில் மட்டும் 126 நபர்களும், நிகழாண்டில் இதுவரை 6 பேரும் விபத்துகளில் சிக்கி, தலையில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துள்ளனர்.
எனவே, இருசக்கர வாகன விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இருசக்கர வாகன தணிக்கையை மேம்படுத்தும் வகையில், தூத்துக்குடி நகரம் மற்றும் கோவில்பட்டியில் இயங்கி வரும் நவீன கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம், மோட்டார் வாகன சட்ட விதியை மீறுபவர்களை கண்டறிந்து, அவர்களது முகவரிக்கு அஞ்சல் மூலமாக சம்மன் அனுப்பி அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட கண்காணிப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.
கோவில்பட்டி: கோவில்பட்டியில் சாலை விதிகளை மீறுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டறியவும் நகரில் 37 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக டி.எஸ்.பி. ஜெபராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கோவில்பட்டியில் சாலை விதிகளை மீறி போக்குவரத்து நெரிசலை உருவாக்குபவர்களை கண்டறியவும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள், அளவுக்கு அதிகமாக இருசக்கர வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வது, செல்லிடப்பேசி பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு சாலை விதிகளை மீறுபவர்களையும் கண்டறியும் வகையில், 37 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்தக் கண்காணிப்பு கேமராவின் கட்டுப்பாட்டு அறை போக்குவரத்து காவல் அலுவலகத்தில் செயல்படும். வாகன ஓட்டுநர்கள் சாலை விதிகளை மீறினால் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
தொடர்ந்து, போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வரும் கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகளை டி.எஸ்.பி. ஜெபராஜ் பார்வையிட்டார். அப்போது, காவல் ஆய்வாளர்கள் பவுல்ராஜ் (கிழக்கு), விநாயகம் (மேற்கு), போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுடலைமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com