கோவில்பட்டி தனிக் குடிநீர் திட்டம்: பிப்ரவரி முதல் வாரத்தில் பயன்பாட்டு வரும்: அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

கோவில்பட்டி தனிக்குடிநீர் திட்டம் பிப்ரவரி முதல் வாரத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தெரிவித்தார். 

கோவில்பட்டி தனிக்குடிநீர் திட்டம் பிப்ரவரி முதல் வாரத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தெரிவித்தார். 
 இது குறித்து அவர்  திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:   இந்தியாவில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன. இதில், தலைசிறந்த காவல் நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் முதலிடத்தையும், சென்னை அண்ணா நகர் கே-4 காவல் நிலையம் மூன்றாம் இடத்தையும் பெற்றிருக்கிறது. அந்த அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சிறப்பாக செயல்படுகின்ற மாநிலம் தமிழகம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 
 கோவில்பட்டி தனிக்குடிநீர் திட்டப் பணி வெற்றிகரமாக முடிந்துவிட்டது. புதிதாக கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கத் தொட்டிகளில் ஏதேனும் கசிவு இருக்கிறதா என்பதை சரி பார்க்கும் வகையில் நீரேற்றும் பணி நடைபெற்று வருகிறது. 
அதிலும் முடிவடைந்த பின்,  தமிழக முதல்வரால்  ஜனவரி மாத இறுதியிலோ, அல்லது பிப்ரவரி மாத முதல் வாரத்திலோ மக்கள் பயன்பாட்டிற்கு தனிக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும் என்றார் அவர். 
 முன்னதாக, யோகாவில் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டு சான்றிதழ்கள் பெற்ற விருதுநகர் நோபல் மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளியைச் சேர்ந்த மனிஷாகுமாரி, அதே பள்ளியைச் சேர்ந்த யாக்ஷினி மற்றும் கண்ணைக் கட்டிக் கொண்டு ஸ்கேட்டிங்கில் ஈடுபட்ட விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயாவைச் சேர்ந்த ஜெயகுரு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வை வலியுறுத்தி செங்கல் மீது அரை மணி நேரம் அமர்ந்து பத்மாசனத்தில் ஈடுபட்ட நாகராஜன் ஆகியோரை பாராட்டி அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பரிசு மற்றும் ரொக்கப்பணம் வழங்கினார். 
 நிகழ்ச்சியில், அதிமுக நகரச் செயலர் விஜயபாண்டியன், இனாம்மணியாச்சி ஊராட்சி செயலர் ரமேஷ், அதிமுக நிர்வாகி பழனிகுமார் மற்றும் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com