துயரத்தின் பிடியில் தூத்துக்குடி: இயல்புநிலை திரும்ப செய்ய வேண்டியது என்ன?

துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து துயரத்தின் பிடியில் சிக்கியுள்ளது தூத்துக்குடி. இயல்பு வாழ்க்கை முடங்கியதால்,

துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து துயரத்தின் பிடியில் சிக்கியுள்ளது தூத்துக்குடி. இயல்பு வாழ்க்கை முடங்கியதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.
முத்துக்குளியலுக்கு பெயர் பெற்ற தூத்துக்குடியில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை. இந்த ஆலையால் அவ்வப்போது பிரச்னைகள் எழுவதும், பின்னர் அது நீர்த்துப் போவதும் தொடர்கதையாக நீடித்து வந்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு தொடக்கக் காலத்தில் இருந்தே அரசியல் கட்சியினரும், மக்களும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அ.குமரெட்டியாபுரத்தில் மிகப்பெரிய போராட்டம் தொடங்கியது. மார்ச்
24 -க்குப் பிறகு தூத்துக்குடி பனிமயமாதா பேராலய வளாகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தின் நூறாவது நாளான மே 22 -ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதில் கடற்கரை பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
முற்றுகையின்போது மோதல் வெடித்ததைத் தொடர்ந்து காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வரலாற்றில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
தொடரும் மோதல்: துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்று 3 நாள்கள் ஆனபோதிலும், தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பவில்லை. வாகனங்களுக்கு தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு, கல்வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடை அடைப்பின் காரணமாக அத்தியாவசியப் பொருள்கள்கூட கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
போக்குவரத்து பாதிப்பால் மற்ற பகுதிகளில் இருந்து தூத்துக்குடி துண்டிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், வீட்டை விட்டு வெளியே வந்தால் காவல் துறையினர் பிடித்துச் சென்றுவிடுவார்கள் என்ற அச்ச உணர்வு காரணமாக பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். காவல் துறையின் கடுமையான அடக்குமுறையால் மீளாத் துயரில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் அரசின் மீதும், காவல் துறை மீதும் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
தணியாத பதற்றம்: தூத்துக்குடியில் நிலவி வரும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முதல்கட்டமாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்துள்ளது தமிழக அரசு. ஆனால் அதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இடமாற்றம் செய்யப்பட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பதில் போராட்டக்காரர்கள் உறுதியாக இருக்கிறார்கள். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் சடலங்களை வாங்க மறுத்து அவர்களுடைய குடும்பத்தினர் போராடி வருகிறார்கள்.
போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் தூத்துக்குடி கடற்கரை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், கடலோர கிராமங்களில் அதிகளவு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதி இளைஞர்கள் பலர் திடீரென மறைந்திருந்து போலீஸார் மீது பெட்ரோல் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தி வருவதால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
அமைதிக் குழு: இந்தப் பிரச்னையை தீர்க்க கடற்கரை பிரதிநிதிகள் மற்றும் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்; இல்லையெனில் பதற்றம் தணிய வாய்ப்பில்லை என்று கடற்கரை கிராம பெரியவர்களும், தூத்துக்குடி மக்களும் தெரிவிக்கின்றனர்.
1996-இல் தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரத்தின்போது, போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சிலர் உயிரிழந்தனர். இதையடுத்து பதற்றத்தைத் தணிக்க, அப்போதைய அதிகாரிகள் அடக்குமுறையை கைவிட்டு, சுமுகமான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் இயல்புநிலை திரும்பியது.
எனவே தற்போதைய பதற்றமான சூழலை முடிவுக்கு கொண்டுவர அரசுத் தரப்பில் அமைதிக் குழுவை ஏற்படுத்தி, போராட்டக் குழுவின் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்த வேண்டும். அணிவகுப்பு என்ற பெயரில் போலீஸார் அத்துமீறுவதை நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தடை உத்தரவு: ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு உயர் நீதிமன்றம் தற்போது தடை விதித்துள்ள நிலையில், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய பரிந்துரையின்பேரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் போராட்டக் குழுவினரிடம் அரசுத் தரப்பு நேரடியாக எடுத்துக்கூற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்டோரை உடனடியாக விடுவிக்க வேண்டும், போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை போராட்டக் குழு முன்வைத்துள்ளது. தூத்துக்குடியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸாரையும் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் நிபந்தனை விதிக்கின்றனர்.
ஆறுமுகனேரி கா.ஆ.பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்புஆறுமுகனேரி, மே 24: ஆறுமுகனேரி கா.ஆ.மேல்நிலைப் பள்ளியில் 42 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர், மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்பள்ளியில் 1970-76 இல் பயின்ற மாணவர், மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடைபெற்றது.
ஒய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சுகுமார் தலைமை வகித்தார். தனியார் பள்ளித் தாளார் சிவசங்கர் மற்றும் வியாபாரி செந்தூர்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் தாணு பேசினார். முன்னாள் ஆசிரியர்கள் எஸ்.துரைப்பாண்டியன், து.ஜெயஜானகி, சதானந்தம், நயினாமுகம்மது, நம்பி, ஞானையா, சிதம்பர சுப்பிரமணியன், ரென்சிலிங் மற்றும் பாலசிங் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.
முன்னாள் மாணவர்கள் சார்பில் ஆறுமுகனேரியில் இயங்கும் முதியோர் இல்லத்தில் உள்ள 61 பேருக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ராமநாதன் நினைவுப் பரிசு வழங்கினார். முன்னதாக மோரீஸ் வரவேற்றார். ஜென்ராம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com