தாமிரவருணி புஷ்கரம் ஆத்தூர், முக்காணி, ஏரல் படித்துறைகளில் குவியும் பக்தர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி, ஆத்தூர், முக்காணி, ஏரல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி, ஆத்தூர், முக்காணி, ஏரல் படித்துறைகளில் நீராடும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரவருணி புஷ்கர விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆத்தூர் சோமதீர்த்தம் (அரசமரத்து படித்துறை), முக்காணி அகஸ்திய தீர்த்த படித்துறை (சீனிவாசபெருமாள் கோயில் அருகில்), சங்கமேஸ்வர தீர்த்த படித்துறை (இராம பரமேஸ்வரர் சமேத பர்வத வர்த்தினி அம்பாள் கோயில் அருகில்), சேர்ந்தபூமங்கலம் சண்டிகா தீர்த்த படித்துறை (ஆரிய நாச்சி அம்பாள் கோயில் பின்புறம்), சம்புநாராயண படித்துறை தீர்த்தம் (தேவர் சமுதாய தெரு), உமரிக்காடு அக்னி தீர்த்த படித்துறை  (ஆற்றாங்கரை சுவாமி கோயில் அருகில்), சொக்கப்பழக்கரை வாழவல்லான கங்கா தீர்த்த படித்துறை (சொக்கப்பழக்கரை கங்கா தேவி ஆலயம் அருகில்), சேதுக்குவாய்த்தான் வஸ்து தீர்த்த படித்துறை (முப்புடாதி அம்மன் கோயில் அருகில்), ஏரல் அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் அருகில் உள்ள ஞான தீர்த்த படித்துறை, ஏரல் தீர்த்தகரை அருள்மிகு சுந்தர விநாயகர் கோவில் படித்துறை ஆகியவற்றில் ஐந்தாவது நாளாக செவ்வாய்க்கிழமை உள்ளூர், வெளியூர்  மற்றும் வெளிமாநில பக்தர்கள் வருகை தந்து புனித நீராடினர். ஹோமங்கள், கோபூஜை மற்றும் மாலையில் தீப வழிபாடு முதலியன நடைபெற்றன.
சேனையர் சமுதாயம் சார்பில் ஆத்தூர் சோமதீர்த்தம் படித்துறை, அரசமரத்தடி படித்துறையில் அதிகாலை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. கோபூஜை, ருத்ர ஜெபம் மற்றும்  விஷ்ணு சகஸ்ரநாம ஜெபம் நடைபெற்றது. கலசங்களில் உள்ள புனிதநீர் தாமிரவருணி நதியில் சேர்க்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து பக்தர்கள் புனித நீராடினர். ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம்  வழங்கபட்டது.
மாலையில் பழையகிராமம் பிராமணர் சமுதாயம் மற்றும் சேனைத்தலைவர் சமுதாயம் சார்பில்  நதிக்கரையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
உமரிக்காடு படித்துறையிலிருந்து தூத்துக்குடியில் உள்ள அம்மன் கோயிலுக்கு மகளிர் புனித நீர் எடுத்துச் சென்றனர்.
சேதுக்குவாய்த்தான் கிராமம் வஸ்து  தீர்த்தத்தில் மாலை தீப ஆராதனை நேரத்தில் படித்துறையில் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
செங்கோல் ஆதீனம்: ஆத்தூர் சோம தீர்த்த படித்துறையில் (அரச மரத்து படித்துறை) தாமிரவருணி மஹா புஷ்கர விழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சி, சைவ வேளாளர் சமுதாயம் சார்பில் நடத்தப்பட்டது. இதையொட்டி ஆத்தூர் சந்தனமாரி அம்மன் திருக்கோயிலில் கணபதி ஹோமம் மற்றும் கோ பூஜை நடத்தப்பட்டது. பின்னர், சோமதீர்த்த படித்துறையில் பல்வேறு வகையான அபிஷேகங்கள், தீப ஆராதனைகள் நடத்தப்பட்டது. 
நிகழ்ச்சியில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103ஆவது குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச சத்யஞான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கலந்து கொண்டு தாமிரவருணி ஆற்றுக்கு வழிபாடு நடத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com