கோவில்பட்டி, சாத்தான்குளத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

கோவில்பட்டியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.


கோவில்பட்டியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில் கோவில்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 26 சிலைகள், நாலாட்டின்புத்தூர் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் ஒன்று, கழுகுமலை காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் 7 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள் விசர்ஜனம் செய்வதற்காக சனிக்கிழமை ஊர்வலமாக புறப்பட்டன.
கோவில்பட்டி இலக்குமி ஆலை மேம்பாலம் முன்பிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை வடக்கு மாவட்டச் செயலர் பெரியசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று செண்பகவல்லி அம்மன் கோயில் வந்தடைந்தன. கழுகுமலை மற்றும் நாலாட்டின்புத்தூரில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட சிலைகளும் செண்பகவல்லி அம்மன் கோயில் கொண்டுவரப்பட்டன.
இந்து மக்கள் கட்சி சார்பில் கோவில்பட்டியில் 6 விநாயகர் சிலைகளும், கயத்தாறில் 11 விநாயகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகளுக்கு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர் ந்து, சனிக்கிழமை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
கோவில்பட்டி இனாம்மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஊர்வலத்துக்கு, கட்சியின் நகரத் தலைவர் தளவாய்ராஜ் தலைமை வகித்தார். தென்மண்டல இளைஞரணிச் செயலர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். தொழிலதிபர் செல்லத்துரை என்ற செல்வம் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
கயத்தாறில் நடைபெற்ற ஊர்வலத்துக்கு, மாவட்டச் செயலர் லட்சுமிகாந்தன் தலைமை வகித்தார். ஸ்ரீ திருநீலகண்ட ஆலயம் முன்பிருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தில் 11விநாயகர் சிலைகளும் வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் தச்சமொழி, கோமானேரி, புதுக்குளம், புளியங்குளம் , அமுதுண்ணாக்குடி உள்ளிட்ட 16 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த சிலைகள் அனைத்தும் சனிக்கிழமை குலசேகரன்பட்டினம் கடலில் விசர்ஜனம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. வழக்குரைஞர் க. வேணுகோபால் தலைமை வகித்து தொடங்கிவைத்தார்.
உடன்குடி: அகில பாரத இந்து மகாசபை சார்பில் உடன்குடி, சாத்தான்குளம் ஒன்றியப் பகுதிகளில் 32 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள் அனைத்தும் சனிக்கிழமை தேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் பள்ளி முன் கொண்டு வரப்பட்டு, அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்ந்து நடைபெற்ற ஊர்வலத்துக்கு இந்து மகாசபை ஒன்றிய பொதுச் செயலர் உதயகுமார் தலைமை வகித்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியே சென்று குலசேகரன்பட்டினம் சூரசம்ஹார கடற்கரையை அடைந்தது. அங்கு அனைத்து சிலைகளும் விசர்ஜனம் செய்யப்பட்டது.
இந்து மக்கள் கட்சி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளும் பள்ளி முன்பாக கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து ஊர்வலம் நடைபெற்றது. அசோக் சுப்பையா தொடங்கிவைத்தார்.
இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் எஸ்.கணேசன், மாவட்ட துணைத் தலைவர் செல்லத்துரை பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியே சென்று குலசேகரன்பட்டினம் கடற்கரையை அடைந்தது. அங்கு சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com