திருச்செந்தூர் கோயிலில் அடிப்படை வசதிகள் குறித்து நீதிபதிகள் ஆய்வு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி டி.இளங்கோவன், திருச்செந்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவாஜி செல்லையா ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி டி.இளங்கோவன், திருச்செந்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவாஜி செல்லையா ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களையும் ஆய்வு மேற்கொண்டு இம்மாதம் 30ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனடிப்படையில் மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் அந்தந்த மாவட்ட நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, இக்கோயிலில் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கோயில் இணை ஆணையர் பா.பாரதி, நீதிமன்ற தலைமை எழுத்தர் கடற்கரை தங்கம், கோயில் இளநிலை பொறியாளர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பக்தர்கள் குற்றச்சாட்டு: கோயில் உள் மற்றும் வெளிப்பிரகாரம், வரிசைப்பாதை, கடற்கரை, கோயில் வளாகம், வாகன நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட நீதிபதிகள், பக்தர்களிடம் அடிப்படை வசதிகள் மற்றும் தேவை குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது பக்தர்கள் போதிய குடிநீர் வசதி இல்லை எனவும், கோயிலில் வழங்கப்படும் குடிநீர் குடிப்பதற்கு ஏற்ற நீராக இல்லை எனவும் தெரிவித்தனர். மேலும், கோயில் உள்ளே ஆங்காங்கே குப்பைகள் கிடக்கின்றன. வரிசையில் முதியவர்கள் மற்றும் கைக்குழந்தையுடன் தரிசனத்துக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும், கிரிப்பிரகாரத்தின் மேற்கூரை இல்லாததால், வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது எனவும் பக்தர்கள் நீதிபதியிடம் குற்றஞ்சாட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com