சீரான குடிநீர் விநியோகம்: அமைச்சர் அறிவுறுத்தல்

அரியலூர் மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகத்துக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு அலுவலர்கள்

அரியலூர் மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகத்துக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ். வளர்மதி.
ஆட்சியரகத்தில், விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம், குடிநீர் விநியோகம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில்
பங்கேற்று அமைச்சர் பேசும்போது, விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இடுபொருள் மானியம் மற்றும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
குடிநீர் விநியோகம் தொடர்பான அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என ஆட்சியருக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.
முன்னதாக ஆட்சியர் கூறியதாவது: ரூ.20.48 கோடி இடுபொருள் மானியம், 49,481 விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் தினசரி தேவையான அளவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் ரூ.1.62 கோடியில் 45 பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் 37 பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள 8 பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட பொது நிதியிலிருந்து 2.48 கோடியில் 77 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றில் 41 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 36 பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.79 கோடி நடப்பு நிதியாண்டிற்கு பெறப்பட்டு அனைத்து ஊராட்சிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கால்நடைகளுக்கு போதிய தீவனங்கள் உள்ளன. ரூ. 91 லட்சத்தில் 5 தீவன கிடங்குகள் தொடங்கப்பட்டு கால்நடை தீவனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
குடிமராமத்து பணிகள், தடுப்பணைகள் கட்டுதல் மற்றும் நீர்நிலைகளை ஆழப்படுத்துதல் உள்ளிட்ட 99 வறட்சி நிவாரண பணிகள் ரூ.6.63 கோடி மதிப்பீட்டில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
கூட்டத்தில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநரும், அரசின் முதன்மைச் செயலருமான ஷம்பு கல்லோலிகர், அரசு தலைமை கொறடா தாமரை. எஸ். ராஜேந்திரன், ஜயங்கொண்டம் எம்.எல்.ஏ. ஜே.கே.என்.ராமஜெயலிங்கம், குன்னம் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகேஸ்வரி உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com