கொடி நாள் நிதி வசூலிக்கும் பணி தொடக்கம்

அரியலூர் மாவட்டத்தில் நிகழாண்டுக்கான கொடி நாள் வசூல் ரூ.21.36 லட்சமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்

அரியலூர் மாவட்டத்தில் நிகழாண்டுக்கான கொடி நாள் வசூல் ரூ.21.36 லட்சமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா தெரிவித்தார். அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை அவர் வியாழக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியது:
  படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினரை கெளரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ஆம் தேதி படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
 இத்தினத்தையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அரசு இலக்கு நிர்ணயித்து, கொடிநாள் நிதி வசூலிக்கப்படுகிறது. 
அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டுக்கான கொடிநாள் நிதி வசூல் இலக்கு ரூ.19,42,600 ஆகும். ஆனால், அனைத்துத்துறை அலுவலர்களின் ஒத்துழைப்பால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட அதிகமாக ரூ.24,78,000 நிதி வசூலித்து சாதனை படைக்கப்பட்டது.  இந்நிலையில், நிகழாண்டில் அரசு ரூ.21,36,000 கொடிநாள் நிதி வசூல் இலக்கு நிர்ணயித்துள்ளது. 
எனவே, கடந்த ஆண்டைபோல, இந்த ஆண்டும் கொடிநாள் நிதி வசூலில் அனைத்துறைகளின் ஒத்துழைப்புடன் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கைவிட கூடுதலாக வசூலித்து, சாதனை படைக்க வேண்டும் என்றார்.
 இந்நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணிப்பாளர் ம.கலையரசிகாந்திமதி, தேர்வு உதவியாளர் சார்லஸ்பேட்ரிகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் 
ரெ.மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூரில்... பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நல அலுவலக பணியாளர்களிடம் உண்டியலில் நிதி அளித்து, கொடி நாள் வசூலை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா கூறியது: 
பெரம்பலூர் மாவட்டத்துக்கு கடந்த ஆண்டு கொடி நாள் நிதி வசூலாக ரூ. 9,58,100 நிர்ணயிக்கப்பட்டது. அனைத்துத் துறை அலுவலர்களின் ஒத்துழைப்போடு ரூ. 12,50,000 நிதி வசூலிக்கப்பட்டது. நிகழாண்டு ரூ. 10,53,900 
இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது படைவீரர்களின் தன்னலமற்ற தியாகத்தை போற்றிடும் வகையில், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொடி நாள் வசூலில் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்றார் அவர். 
தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாலையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை, ராணுவ பணி ஊக்க மானியம், ஈமச்சடங்கு நிதியுதவி, வங்கிக்கடன் வட்டி மானியம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் 5 பேருக்கு ரூ. 82,165 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார் ஆட்சியர் சாந்தா. 
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொ) சேதுராமன், ஓய்வுபெற்ற கர்னல் ப. சதானந்தம், நல அமைப்பாளர் சடையன், முன்னாள் முப்படை வீரர்கள் நல அறக்கட்டளை தலைவர் முனைவர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com