பாலம் கட்டியும் பலனில்லை: சேதமடைந்த சாலையால் அவதிக்குள்ளாகும் கிராம மக்கள்

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் குறுக்கு சாலையில் இருந்து கடலூர் மாவட்டம், முட்டம் கிராமத்துக்கு இடையே உள்ள

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் குறுக்கு சாலையில் இருந்து கடலூர் மாவட்டம், முட்டம் கிராமத்துக்கு இடையே உள்ள சாலைகள் சீரமைக்கப்படாததால்   கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டியும் பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
 அரியலூர் ஜயங்கொண்டம், மீன்சுருட்டி பகுதி மக்கள் மயிலாடுதுறைக்கு செல்ல அணைக்கரை, பந்தநல்லூர் வழியாகவும், வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல ஜயங்கொண்டத்தில் இருந்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சிதம்பரம் வழியாகவோ அல்லது அணைக்கரை, பந்தநல்லூர், மணல்மேடு வழியாகவோ சென்று வந்தனர்.
 ஆனால், கடலூர் மாவட்டத்தின் கடைகோடி பகுதியான காட்டுமன்னார்கோயில் வட்டம், முட்டம் கிராமத்திற்கும் நாகை மாவட்டம், மணல்மேடுக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டினால் ஜயங்கொண்டம் குறுக்குசாலையில் இருந்து கொல்லாபுரம், ஆயங்குடி, மோவூர், முட்டம் வழியாக மணல்மேடு சென்று மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், காரைக்கால் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல சுமார் 25 கி.மீ. தூரம் பயணம் குறையும்.
 இதனால், கொள்ளிடத்தின் குறுக்கே முட்டம் கிராமத்துக்கும் மணல்மேட்டுக்கும் இடையே பாலம் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, கடந்த 2010-ஆம் ஆண்டு ரூ.43 கோடியில் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை 2015-இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  இதனால் இப்பகுதி மக்கள் போக்குவரத்து மிகவும் எளிதாகும் என மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் பாலம் கட்டி இதுநாள் வரை ஜயங்கொண்டம் குறுக்குசாலையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் கிராம சாலைகள் சீரமைக்கப்படாததால் பாலம் கட்டிய பிறகும் கூட மீண்டும் பழையபடி சுற்றியே செல்ல வேண்டிய நிலை உள்ளது.  மேலும், அணைக்கரை வழியாக செல்லும் சாலையில் கீழணையில் உள்ள பாலம் பழுதடைந்ததால் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஜயங்கொண்டம், தா.பழூர் வழியாக மதனத்தூரில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் வழியாக கும்பகோணம் சென்றுதான் செல்லவேண்டும். 
 எனவே, ஜயங்கொண்டம் குறுக்குச் சாலையில் இருந்து மோவூர் கிராமம் வரை உள்ள 10 கி.மீ. சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com