கல்லக்குடியில் ஆழ்துளைக்குழாய் அமைக்கக் கூடாது: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

அரியலூர் மாவட்டம் கருப்பிலாக்கட்டளை அருகேயுள்ள கல்லக்குடி கிராமத்தில் 1000 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக்குழாய் அமைக்கும் முயற்சியை

அரியலூர் மாவட்டம் கருப்பிலாக்கட்டளை அருகேயுள்ள கல்லக்குடி கிராமத்தில் 1000 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக்குழாய் அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியாவிடம் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்த மனு:
அரியலூர் ஒன்றியம், கருப்பிலாக்கட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட கல்லக்குடி கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் தங்களது நிலங்களில் 400 அடி ஆழத்துக்கு 150-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் குழாய் கிணறு அமைத்து பயிர் சாகுபடி செய்து வருகிறார்கள்.குடிநீர் தேவைக்காக 300 அடி ஆழத்துக்கு 250-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறு உள்ளது. தற்போது வறட்சியின் காரணமாக தண்ணீர் கிடைப்பதே அரிதாகி உள்ளது. இந்நிலையில், கல்லக்குடி ஊர் மையத்தில் சுமார் 1000 அடி அழத்துக்கு ஆழ்துளைக்குழாய் கிணறு அமைத்து,இங்கிருந்து தண்ணீர் எடுத்து வேறு ஊர்களுக்கு கொண்டு செல்லப்போவதாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட கடந்த வாரம் ஊருக்கு வந்து பார்வையிட்டுச்  சென்றிருக்கிறார்கள். கல்லக்குடி ஊரில் அதிக ஆழத்துக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து நீர் உறிஞ்சப்படுமானால், இங்கு பயன்பாட்டிலிருக்கும் 250 குடிநீர் ஆழ்குழாய் கிணறுகளும், 150 விவசாய ஆழ்துழாய் கிணறுகளும் வற்றிப் போய், இவ்வூரின் நீர் ஆதாரம் பறிபோகும் நிலைக்கு வந்து விடும். எனவே ஆட்சியர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com