வாரச்சந்தை இடத்தில் நகராட்சி கட்டடம்: எதிர்த்து வியாபாரிகள் போராட்டம்

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் வாரச்சந்தை செயல்பட்டு வரும் இடத்தில் நகராட்சி அலுவலகக் கட்டடம் கட்டுவதற்காக

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் வாரச்சந்தை செயல்பட்டு வரும் இடத்தில் நகராட்சி அலுவலகக் கட்டடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழிகளை மூடி பெண் வியாபாரிகள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டத்தில், விருதாசலம் சாலையில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது. இந்த இடத்தின் ஒருபகுதியில் ஜயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திற்கு ரூ. 2.1 கோடியில் கட்டடம் கட்ட பூமிபூஜை போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த இடத்தில் கட்டடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வாரச்சந்தை வியாபாரிகள் சாலை மறியல், சந்தை புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை பெய்த மழையால் நகராட்சிக்கு புதிய அலுவலகக் கட்டட தூண்கள் கட்டுவதற்கு தோண்டிய குழியில் தண்ணீர் தேங்கியது.
இதையடுத்து, கட்டடப் பணியை தொடங்க நகராட்சி நிர்வாகம் மோட்டார் பம்ப் மூலம் வெள்ளிக்கிழமை தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த வாரச்சந்தை நடத்தும் பெண் வியாபாரிகள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் மணல் மற்றும் கற்களைக் கொண்டு குழிகளை மூடி பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த நகராட்சி அலுவலர்களுக்கும், பெண் வியாபாரிகளுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனால் பணிகள் நிறுத்தப்பட்டன.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்தினர் ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீஸார் பொதுமக்களை சமாதானம் செய்தனர்.
அப்போது, சந்தையை முழுமையாக மீட்கும் வரை எங்களது போரட்டம் தொடரும், எங்களுக்கு வாழ்வாதாரமான சந்தையை வைத்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம், எனவே, எங்களுடைய வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கும் நகராட்சியை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வியாபாரிகள், பொதுமக்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com