ஜயங்கொண்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவுநாளை முன்னிட்டு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவுநாளை முன்னிட்டு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1426 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மே 17-ம் தேதி தொடங்கியது. மே 17 அன்று ஆண்டிமடம் உள்வட்டம், 18-ம் தேதி குவாகம் உள்வட்டம், 19-ம் தேதி தா.பழூர் உள்வட்டம், 23-ம் தேதி சுத்தமல்லி உள்வட்டம், 24 ஆம் தேதி குண்டவெளி உள்வட்டம், 25 ஆம் தேதி உடையார்பாளையம் உள்வட்டம், நிறைவு நாளான வெள்ளிக்கிழமை ஜயங்கொண்டம் உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது. இதில் தனிப்பட்டா, பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை பெயர் நீக்கம், சேர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 1,477 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 568 மனுக்கள் மீது உடனடியாக தீர்வுகாணப்பட்டது. 656 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 253 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.  தொடர்ந்து, மாலையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் (பொ) தனசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜெயசந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மகாராஜன், துரைராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உலகநாதன், வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்கள், கொள்ளிடத்தில் திருமானூர், மதனத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும், பொன்னாற்றிலும் தடுப்பணைகள் கட்டி மழைநீரை சேமித்து இப்பகுதி விவசாய நிலங்களுக்கு பாசன வசதி செய்து தரவேண்டும், ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மின்திட்டத்தை உடனடியாக தொடங்கி, நிலமிழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையென்றால், நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். ஜயங்கொண்டம் நகராட்சியில் முக்கியமான இடங்களில் கழிப்பறைகள் கட்டவேண்டும், ஜயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிடத்தில் அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக குடிசைப் பகுதிகள் உள்ள தா.பழூரில் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
முன்னதாக வட்டாட்சியர் திருமாறன் வரவேற்றார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் தாரகேஸ்வரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com