மழைபெய்தும் பலனில்லை: வறண்டு கிடக்கும் சோழகங்கம் ஏரி

கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள பொன்னேரி என்கிற சோழகங்கம் ஏரியின் நீர்வரத்துப் பாதைகள் தூர்ந்துபோனதால், தொடர் மழை பெய்தும் ஏரி வறண்டு கிடக்கிறது.

கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள பொன்னேரி என்கிற சோழகங்கம் ஏரியின் நீர்வரத்துப் பாதைகள் தூர்ந்துபோனதால், தொடர் மழை பெய்தும் ஏரி வறண்டு கிடக்கிறது.
 கி.பி.1014 ஆம் ஆண்டில் கங்கைகொண்டசோழபுரத்தில் பொன்னேரி என்கிற சோழகங்கம் ஏரியை, மன்னர் ராஜேந்திரசோழன் உருவாக்கினார். தனது படைகளிடம் தோல்வியடைந்த படைவீரர்களை கொண்டு, சுமார் 3 சதுர கி.மீ., பரப்பளவில் இந்த ஏரி உருவாக்கப்பட்டது.
இதன் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றன. காலப்போக்கில், பராமரிப்பில்லாததால் ஏரிக்கு வரும் நீர் பாதைகள் அடைபட்டு, நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது. இதனால் சோழகங்கம் ஏரியின் மூலம் பாசனம் பெற்ற விளைநிலங்கள் வறண்டு தரிசாகிவிட்டன. மேலும், ஏரியை ஆக்கிரமித்து விலை நிலங்களாகவும், தைலமர காடுகளாவும் மாற்றி விட்டனர். இதனால் ஏரியின் பரப்பளவு மூன்றில் ஒருபங்காக மாறிவிட்டது.
 இருப்பினும் எஞ்சியுள்ள பகுதியில் தற்போது பெய்து வரும் தொடர்மழையில் நீர் பிடித்து, ஏரியை சுற்றியுள்ள குறைந்த அளவிலான நிலங்களுக்காவது பாசன வசதி கிடைக்கும் என விவசாயிகள் நம்பியிருந்தனர். ஆனால், நீர்பாதைகள் பராமரிப்பின்றி சீமைக்கருவேல மரங்கள், நெய்வேலி காட்டாமணக்கு எனும் கொடி பூவரசு, முள்புதர்கள் மண்டி கிடக்கின்றன. இதனால், ஏரி வறண்டு விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
 ஆனால், இங்கிருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள வீராணம் ஏரி நிரம்பியுள்ளது. எனவே, சோழகங்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆழப்படுத்துவது மட்டுமல்லாமல், ஏரிக்கு நீர்வரும் பாதைகளையும் சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com