குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க  அனைவரின் ஒத்துழைப்பு அவசியம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர்

குழந்தைகளுக்கெதிரான குற்றங்களைத் தடுக்க பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு வேண்டும் என்றார் ஆட்சியர் மு.விஜயலட்சுமி.

குழந்தைகளுக்கெதிரான குற்றங்களைத் தடுக்க பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு வேண்டும் என்றார் ஆட்சியர் மு.விஜயலட்சுமி.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சி மன்றங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மணக்கால் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்துப் பேசியது: பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதால் பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன. 
ஆகவே பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாவட்டத்தை முழு சுகாதாரக மாற்ற அனைவரும் கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குழந்தை கடத்தல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறை, குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டுமென்றால் அனைவரின் ஒத்துழைப்பு அவசியம் வேண்டும் என்றார் அவர். 
தொடர்ந்து கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை தடை செய்தல், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் அந்தியோதயா இயக்கம் முழு இலக்கினை அடைவது மற்றும் கிராம ஊராட்சி  நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், குடிநீரை சிக்கனமாகவும் முறையாகவும் பயன்படுத்துதல் குறித்தும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தூய்மை கணக்கெடுப்பு குறித்தும், திடக்கழிவு மேலாண்மை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட செயல்பாடுகள் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.   
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கே.லோகேஷ்வரி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அகிலா, ஜாகீர்உசேன் மற்றும் அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
சமபந்தி பொது விருந்து: சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் கோதண்டராமசாமி திருக்கோயிலில் சமபந்தி பொது விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி கலந்து கொண்டார். இதேபோல் திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயில், கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் திருக்கோயில், திருமானூர் கைலாசநாதர் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் சமபந்தி நடைபெற்றது. 

அரியலூரில்......
சுதந்திர தினத்தையொட்டி அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தேசிய கொடியினை ஏற்றி வைத்து, சமாதான புறாக்களை பறக்கவிட்டார். தொடர்ந்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, காவல்துறை, பள்ளி தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கும், அவர்களது வாரிசுதாரர்களுக்கும் கைத்தறி ஆடைகளை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சார்பில் 39 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்து 29 ஆயிரத்து 455 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பதக்கங்களையும் வழங்கினார். தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், மாவட்ட எஸ்பி.,அபிநவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.தனசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கே.லோகேஷ்வரி உட்பட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
அரியலூர் அரசு கலைக் கல்லூரி:
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் பெ.பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து, வருமையில்லா வளமான பாரதத்தை உருவாக்கிட, இந்தியாவை வல்லரசாக்கி உலக அரங்கில் முன்னிருத்திட இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் என்றார் அவர். முன்னாள் முதல்வர் இல.தியாகராஜன், தாவரவியல் துறையின் முன்னாள் தலைவர் பொன்.பரமசிவம்,தமிழ்த்துறை முன்னாள் பேராசிரியர் வீ.பொய்யாமணி மற்றும் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் சா.சிற்றரசு ஆகியோர் சுதந்திரதின உரையாற்றினார்கள்.  நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் அணிவகுப்பும் நிகழ்ச்சியும்,கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்(பொ)  ஆ.அருள், தமிழ்த்துறை பேராசிரியர் க.தமிழ்மாறன், இயற்பியல் துறைப் பேராசிரியர் இராசமூர்த்தி, கணினி அறிவியல் துறைப் பேராசிரியர் ப.செல்வகுமார், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் வெ.கருணாகரன், பி.செல்வமணி, கொ.ராஜசேகர் ஆகியோர் செய்திருந்தனர். 
இதேபோல் கீழப்பழுவூர் அருகேயுள்ள விநாயகா கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் தாளாளர் சி. பாஸ்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார். தொடர்ந்து மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெர்றது.முன்னதாக கல்லூரி முதல்வர் வேல்முருகன் அனைவரையும் வரவேற்றார். உடையார்பாளையம் அடுத்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரி, தேசியக் கல்லூரி,பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் கல்லூரி முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். 
மாவட்ட மைய நூலகம்:
மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற விழாவில், தலைமை நூலகர் ஸான் பாட்ஷா தேசிய கொடியைக் ஏற்றினார். வாசகர் வட்டத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன்,பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com