திருமழபாடி கோயிலில் மாசிமகப் பெருவிழா தொடக்கம்

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் மாசிமகப் பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் மாசிமகப் பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
தமிழக சுற்றுலாத் தலங்களில் ஒன்றானதும், சிவலாயங்களில் பழமைவாய்ந்ததும், பாடல் பெற்ற தலமான திருமழபாடியிலுள்ள  சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் மாசிமகப் பெருவிழா சிறப்பாக நடைபெறும்.
நிகழாண்டு மாசிமகப் பெருவிழா செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
முன்னதாக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 
தொடர்ந்து விநாயகர், வள்ளிதெய்வானை சமேத முருகன் மற்றும் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி, சண்டிகேஸ்வரர், பாலாம்பிகை ஆகிய தெய்வங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோயிலில் உள்ள கொடிமரத்தின் அருகில் வைக்கப்பட்டன. தொடர்ந்து கொடிமரத்திற்கு  அபிஷேகமும், தீப ஆராதனையும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து,  தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு,
 நந்திவாகனம் பொறிக்கப்பட்ட திருக்கொடி சுவாமிகளின் முன்பு கொடி ஏற்றப்பட்டது. பக்தர்கள் திருக்கொடியை வணங்கினர்.
தொடர்ந்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு சுவாமிகள் மஞ்சத்தில் திரு உலாக்காட்சி நடைபெற்றது. 
மேலும், மாசிமகப்பெருவிழாவை முன்னிட்டு 21 ஆம் தேதி ஆதிசேஷ வாகனத்திலும், 22 ஆம் தேதி பூதவாகனத்திலும், 23-ம் தேதி கைலாச வாகனத்திலும், 24-ம் தேதி இடப வாகனத்திலும், 25-ஆம் தேதி யானை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார், 
தொடர்ந்து 26 ஆம் தேதி சுவாமிகளுக்கு திருக்கல்யாணமும், 27 ஆம் தேதி சுவாமிகள் குதிரை மற்றும் காமதேனு வாகனத்தில் எழுந்தருளுகிறார்.
விழாவில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 28 ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது. 
கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் அனிதா மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com