அரியலூர் கடைவீதிகளில் மக்கள் வெள்ளம்!

பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூர் கடைவீதிகளில் சனிக்கிழமை மக்களின் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூர் கடைவீதிகளில் சனிக்கிழமை மக்களின் கூட்டம் அலைமோதியது.
புத்தாடைகள், பொங்கல் பண்டிகை பொருள்கள், மண்பானை விற்பனை களைகட்டியுள்ளது. மக்களைக் கவரும் வகையில் வணிக வளாகங்கள், முன்னணி நிறுவனங்கள் பல்வேறு தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளன. இதனால் அரியலூர் நகரில் பிரதான கடைவீதி,சின்னக்கடைவீதி, மார்க்கெட் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 2 நாள்களாக மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
இப்பகுதிகளில் மஞ்சள்கிழங்கு, கரும்பு உள்ளிட்ட தாற்காலிக கடைகளும் அதிகரித்துள்ளன. சனிக்கிழமை காலையிலேயே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பிரபல கடைகள் முதல் சாலையோரக் கடைகள் வரை கூட்டம் அதிகமிருந்தது. நெரிசலை போக்குவரத்து போலீஸார் ஒழுங்குபடுத்தினர். திருடர்களைக் கண்காணிக்க 50-க்கும் மேற்பட்ட போலீஸார் சாதாரண உடையில் மக்களோடு சென்றனர். அதிக நகை அணிந்து சென்ற பெண்களிடம், நகைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ளும்படி அறிவுரை வழங்கினர்.
பொதுமக்களிடம் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. மேலும் வெளியூர்காரர்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் அரியலூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
திருச்சி,தஞ்சை,விருத்தாசலம்,பெரம்பலூர்,கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளிலும் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல அரியலூர் ரயில் நிலையத்திலும் வழக்கத்தைவிட சனிக்கிழமை காலை முதலே மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com