அரியலூர், பெரம்பலூரில் மழை

அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 4 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 4 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. கத்திரி வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்கிறது. ஆனால், அரியலூர் மாவட்டத்தில் மட்டும் கருமேகம் திரண்டு வந்தபோதிலும், மழை பொழியவில்லை.
இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் பெய்த மழையில்,பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததில் அரியலூர் நகர் முழுவதும்  மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 
தொடர்ந்து, 4 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் பெய்த மழையில், பல இடங்களில் மழை தண்ணீர் தேங்கியது.திருமானூர்,செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
மாவட்டத்தில் தொடர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெரம்பலூர்... பெரம்பலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மதியம் பரவலான மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே கடுமையான வெயிலின் தாக்கம் காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இந்நிலையில், கடந்த சில நாள்களாக மாலை நேரங்களில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. 
இதனால், கத்திரி வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்படுகிறது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை முதலே குளிர்காற்று வீசியதோடு, வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. 
தொடர்ந்து, மாலை 2 மணி முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்தது. குறிப்பாக, பெரம்பலூர் நகர், துறைமங்கலம், வாலிகண்டபுரம், குன்னம், வேப்பூர், சிறுவாச்சூர், இரூர், பாடாலூர், கவுல்பாளையம், பேரளி, சித்தளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. 
இந்த கோடை மழையால், சாலையோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து, இரவு முழுவதும் குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com