கனிமங்கள் சுரண்டப்படுவதால் அரியலூரில் அழிந்து வரும் விவசாயம்

அரியலூர் மாவட்டத்தைச் சுற்றிலும் கனிமங்கள் சுரண்டப்படுவதால் நிலத்தடி நீர் குறைந்து, விவசாயம் அழிந்து வருகிறது.

அரியலூர் மாவட்டத்தைச் சுற்றிலும் கனிமங்கள் சுரண்டப்படுவதால் நிலத்தடி நீர் குறைந்து, விவசாயம் அழிந்து வருகிறது.
ராஜேந்திரசோழனின் தலைநகராக இருந்த கங்கை கொண்ட சோழபுரத்தை உள்ளடக்கியது அரியலூர் மாவட்டம். மாவட்டத்தில் ஒரு பகுதி டெல்டா பகுதியாகவும், அரியலூர், ஜயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட பகுதிகள் வறட்சி பகுதியாகவும் உள்ளது.
இம் மாவட்டம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்து நிலப்பரப்பாக மாறியதால் கனிம வளம் பெற்றுள்ள பூமியாகும். கால்சியம், இரும்பு, அலுமினியம், வேதிப்பொருள், கலவையான கடல் அடிவண்டல் இன்று சுண்ணாம்புக் கல் ஜிப்சம், நாடியூல்ஸ் என்ற படிகவகை பாறையும்,அதனிடையே பாசில் என்ற தொல்லுரியிரிகளும் நிறைந்த மாவட்டமாகும்.
அரியலூர் பகுதியில் சுமார் 60 கோடி டன் சுண்ணாம்பு படிவு, 1 கோடி ஜிப்சம் படிவு உள்ளதால் இங்குள்ள 10 சிமென்ட் ஆலை நிறுவனங்கள், விவசாயிகளிடம் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி, அதில் கனிமங்களை எடுத்து வருகின்றனர். கிட்டதட்ட 3 ஆயிரம் ஹெக்டேர் வரை கனிம சுரங்கங்களாக உள்ளது. 166-க்கும் மேற்பட்ட சுண்ணாம்புக் கல் சுரங்கத்தினாலும், சிமென்ட் ஆலைகளாலும் இன்று அரியலூர் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  தற்போது ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. கனிம வளக் கொள்ளை  மீத்தேன், நியூட்ரினோ, கெயில், ஷேல் கேஸ் போன்ற திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுயினர் போராட்டம் நடத்திவருகின்றனர். கடந்த 1990களில் மிகப்பெரிய கனிமவளக் கொள்ளை நடைபெற்றதும் அரியலூர் மாவட்டத்தில் தான். தற்போது அரசு சிமென்ட் ஆலைகளால் ஆண்டிற்கு ஐந்து லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது . ஏனைய தனியார் சிமென்ட் ஆலைகளால் 50 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. சிமென்ட் ஆலை நாள் ஒன்றுக்கு 1 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பதால், இம்மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. 
மேலும், இங்குள்ள ஒவ்வொரு சுண்ணாம்பு சுரங்கங்களும் 200 அடி முதல் 500 அடி வரை தோண்டப்பட்டுள்ளன. மேலும், காலாவதியான சுரங்கங்கள் மூடப்படாமலேயே உள்ளன. 6 ஆண்டுகளுக்கு முன்பு சேலம், திருச்சி, அரியலூர் நகரை மையப்படுத்தி லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆனால் தனியார் சிமென்ட் ஆலைகள் சுரங்கம் தோண்டுவதை நிறுத்தியபாடும் இல்லை. மேலும், சுரங்கங்களுக்கான இடைவெளி 500 அடி இருக்க வேண்டும் என்ற விதி குறித்து அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.  
இதுகுறித்து சமூக நல செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளவரசன் கூறியது: 
ஆலையில் இருந்து வெளிவரும் புகையால் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பலர் நுரையீரல் பிரச்னை, ஆஸ்துமா, கேன்சர் போன்ற கொடிய நோய்களில் இறந்து கொண்டிருக்கின்றனர். 
கர்ப்பிணி பெண்கள், முதியோர் ஆகியோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் 400 அடிக்கும் மேல் சுண்ணாம்பு வெட்டி எடுக்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு, பூகம்பம் வருவதற்கும், கடல் நீர் உள்ளே புகும் வாய்ப்புள்ளது. நாம் சுண்ணாம்புக் கல் கிடைக்கிறது என்பதற்காக சிமென்ட் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கும் அனுப்புகிறோம். மேலும், சுண்ணாம்பு சுரங்கங்கள் மூடப்படாமல் திறந்து கிடப்பதால் அவ்வப்போது கால்நடைகள் தவறிவிழுந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com