வெளிமாநில விதைகளை விதிமீறி விற்றால் கடும் நடவடிக்கை

அரியலூர் மாவட்டத்தில் வெளிமாநில விதைகளை சட்டத்துக்கு புறம்பாக விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

அரியலூர் மாவட்டத்தில் வெளிமாநில விதைகளை சட்டத்துக்கு புறம்பாக விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் ந. கண்ணன்.
இதுகுறித்த செய்திக் குறிப்பு:
அரியலூர் மாவட்டத்தில் உரிமம் பெற்று விதை விற்கும் விற்பனையாளர்கள், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அறிவிக்கை செய்யப்பட்ட பல்வேறு பயிர்களின் ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு விதைகளை விற்கின்றனர். மேலும் பல வெளி மாநிலங்களில் உற்பத்தியாகி தமிழ்நாட்டுக்கு வரும் விதைகளையும் விவசாயிகளுக்கு விற்கின்றனர்.
அவ்வாறு வெளி மாநிலங்களிலிருந்து  கொள்முதல் செய்யும் விதைகளின் ஒவ்வொரு குவியலுக்கும் விதை சட்டத்தில் உள்ளபடி கொள்முதல் பட்டியலுடன் படிவம்-2 கட்டாயம் பெறப்படவேண்டும். படிவம்-2 என்பது விதை உற்பத்தி செய்யும் மாநிலத்தின் விதைச் சான்று அலுவலரால் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் சான்று. 
மேலும் விதை குவியல்களின் குவியல் எண்ணும் கொள்முதல் பட்டியலில் உள்ள குவியல் எண்ணும் ஒன்றாக இருக்கவேண்டும். கொள்முதல் செய்யப்படும் விதைகள் சான்று விதைகளாக இருந்தால் உற்பத்தியாளர் விவர அட்டையும், சான்று அட்டையும் ஒவ்வொரு மூட்டையிலோ அல்லது பையிலோ தையலிட்டு ஈயக்குண்டு கோர்க்கப்பட்டு அதில் முத்திரை இடப்பட்டிருக்க வேண்டும்.
சான்று அட்டையோ, உற்பத்தியாளர் அட்டையோ இல்லாமல் இருந்தாலோ அல்லது கிழிக்கப்பட்டிருந்தாலோ அந்த விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்படும். மேலும் விவர அட்டையில் பயிர், ரகம், நிலை, குவியல் எண், அளவு, ஆய்வு செய்த தேதி, காலாவதி நாள், உற்பத்தியாளர் முகவரி ஆகியவற்றை முழுமையாக குறிப்பிட வேண்டும்.
மேற்கண்டுள்ளவற்றில் குறைகள் ஏதும் இல்லாமல் விதை சட்டத்தில் காட்டியுள்ள வழிமுறைகளின்படி வெளி மாநில விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விற்க வேண்டும். இதில் ஏதேனும் குறைகள் காணப்பட்டாலோ, விதை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்தாலோ விற்பனையாளர்கள் மீது  சட்ட  நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com