விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் கூட்டுப் பண்ணையத் திட்டம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு நிகழாண்டிலிருந்து கூட்டுப் பண்ணையத்  திட்டம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு நிகழாண்டிலிருந்து கூட்டுப் பண்ணையத்  திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் திருமானூர் வேளாண் உதவி இயக்குநர் சே.கண்ணன்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூட்டுப்பண்ணையத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில், அருகருகே நிலம் அமைத்திருக்கும் 20 சிறு, குறு விவசாயிகளைத் தேர்வு செய்து உழவர் ஆர்வலர் குழு அமைக்கப்படும். உழவர் ஆர்வலர் குழுவில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் குழு உறுப்பினர்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர்.  
குழு உறுப்பினர்களின் நிலம் ஒரே கிராமத்தில் அமையப்பெற்று ஒரே பயிரை சாகுபடி செய்யும் வகையில் அமைத்திருத்தல் வேண்டும். ஒவ்வொரு உழவர் ஆர்வலர் குழுவும் அந்தப் பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு வங்கியில் குழுவின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். 
உழவர் ஆர்வலர் குழு ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சம் ஒரு முறை கூட்டம் நடத்த வேண்டும். இதில் உறுப்பினர் வருகைப் பதிவு 90 சதத்துக்கு அதிகமாக இருக்க வேண்டும். உழவர் ஆர்வலர் குழுவின் உறுப்பினர் ஒவ்வொருவரும் சந்தாவாக ரூ.100, உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு பங்குத் தொகையாக ரூ.1,000 என மொத்தம் ரூ.1,100 அளிக்க வேண்டும். 
ஆர்வலர் குழுவுக்கான தீர்மான பதிவேடுகள் , வருகைப் பதிவேடுகள், பணப் பதிவேடு, சேமிப்பு புத்தகம், கடன் பதிவேடு மற்றும் வங்கிக் கணக்கு ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். குழுவுக்கு வங்கிக்கடன், குழு ஆரம்பித்த ஆறு மாதங்கள் வங்கிக் கடன் தேவைப்பட்டால் பெற்றுக் கொள்ளலாம். உழவர் ஆர்வலர் குழுக்கள் ரூ.5,000-க்கு குறையாமல் கூட்டாக இடுபொருள்களை கொள்முதல் விலையில் சேமிக்க முடியும். 
உழவர் ஆர்வலர் குழுக்களை உருவாக்கிய பிறகு ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 ஆர்வலர் குழுக்களை இணைத்து குறைந்த பட்சம் 100 சிறு, குறு விவசாயிகளைக் கொண்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்க வேண்டும்.
உழவர் உற்பத்தியாளர் குழு: உழவர் ஆர்வலர் குழுக்களின் தலைவர், செயலர், பொருளாளர் ஆகியோர் உழவர் உற்பத்தியாளர் குழுவில் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். 5 உழவர் ஆர்வலர் குழுக்களை ஒருங்கிணைத்து, உழவர் உற்பத்தியாளர் குழு அமைக்க வேண்டும். 
இந்தக் குழுவுக்கு தனி வங்கிக் கணக்கு அருகில் உள்ள வங்கியில் தொடங்க வேண்டும். ஒவ்வொறு உழவர் ஆர்வலர் குழுவிடமும் உறுப்பினர் தொகையாக ரூ.100 விதம் 20 உறுப்பினர்களிடம் வசூலித்த ரூ.2,000-லிருந்து ரூ.500 மட்டும் ஒவ்வொரு உழவர் ஆர்வலர் குழுவிடமும் இருந்து எடுத்து 5 ஆர்வலர் குழுக்களின் தொகையான ரூ.2,500 முன்பணமாக செலுத்தி வங்கிக் கணக்கு தொடங்கப்பட வேண்டும். 
இந்த உற்பத்தியாளர் குழுக்கள் மாதமொரு முறை கூடி, கூட்டு பண்ணையத் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். 
தொகுப்பு நிதி: தனிப்பட்ட முறையில் சிறு, குறு விவசாயிகள் அதிக விலையுள்ள அதாவது நடவு இயந்திரம், அறுவடை இயந்திரம் மற்றும் டிராக்டர் போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்த முடியாத சூழலில், குழுவாக இக்கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு அரசு ஒரு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வழங்கும் ரூ.5 லட்சம் தொகுப்பு நிதியைப் பயன்படுத்தி பண்ணை இயந்திரங்கள், கருவிகள் பொது உள் கட்டமைப்பு போன்ற வசதிகளை பெற்று அவற்றை கூட்டு விவசாயம் செய்வதற்கு பயன்படுத்தலாம். 
இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை சுழற்சி நிதியாக அடுத்த பருவ விவசாயம் அல்லது துணைத் தொழிலுக்கு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். 
திருமானூர் வட்டாரம் அழகியமணவாளன் கிராமத்தில் உருவாக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுவின் மூலம் டிராக்டர் வாங்கப்பட்டது. இதன்மூலம் கிராமத்தில் உழவுப்பணிகள் நாளொன்றுக்கு 7 மணி நேரம் செய்யப்பட்டு வருகிறது. 
மணிக்கு ரூ.550 வாடகை தொகையாக வசூலிக்கப்படுகிறது. ஒரு நாளில் 7 மணி நேரத்திற்கு ரூ. 3,850 வருமானம் கிடைப்பதாகவும் , அதில் எரிபொருள் செலவு மற்றும் ஆட்கூலி செலவு போக ரூ.1,800 நிகர லாபம் கிடைக்கின்றது. 
ஆக மொத்தம் மூன்று போக சாகுபடி பருவங்களில் ஒரு வருடத்திற்கு 90 நாட்களில் ரூ. 1,62,000 நிகர லாபம்  கிடைக்கின்றது. 
இந்த ஆண்டும்  7 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் ஒத்துழைப்பு நல்கி பயன் அடையலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com