ரூ.62 கோடி மதிப்பில் 195 குடிநீர் திட்டப் பணிகள்

கரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக ரூ. 62 கோடி மதிப்பில் 195 குடிநீர் திட்டப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்றார் போக்குவரத்து துறை அமைச்சர்

கரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக ரூ. 62 கோடி மதிப்பில் 195 குடிநீர் திட்டப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்றார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை மாவட்ட வறட்சி நிவாரணப் பணிகள் கண்காணிப்பு அலுவலரும், அரசு நில நிர்வாக இணை ஆணையருமான எஸ். சுரேஷ் குமார் தலைமையிலும், ஆட்சியர் கு.கோவிந்தராஜ் முன்னிலையிலும் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியது:
கரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல், ஆழ்குழாய் கிணறுகளை ஆழப்படுத்துதல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டுதல், மின் மோட்டார்கள் பழுதுநீக்குதல் என ரூ. 62 கோடி மதிப்பில் 195 பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் சீரமைக்கப்படும் என்றார். கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, பட்டு வளர்ச்சி ஆகிய துறைகளின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வறட்சி நிவாரணங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தோகைமலை, தரகம்பட்டி, பஞ்சப்பட்டி, வெள்ளகவுண்டன்பட்டி, அரவக்குறிச்சி, க.பரமத்தி என 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வைக்கோல் கிடங்குகள்,அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்றார்.
கூட்டத்தில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம்.கீதா, குளித்தலை எம்எல்ஏ ராமர், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
'எம்எல்ஏ உண்ணாவிரதம் அவரது சொந்த விருப்பம்'
மருத்துவக்கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்வது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வந்ததும்,மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும். மருத்துவக்கல்லூரிக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியபோது, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியவர் தற்போது உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குவேன் எனக் கூறுவது அவரது சொந்த விருப்பம் என்றார் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com