முன்னாள் படை வீரர் கொடி நாள் நிதி வசூல்: கரூர் மாவட்டத்துக்கு ரூ.60.12 லட்சம் இலக்கு

நிகழாண்டில் கரூர் மாவட்டத்துக்கு முன்னாள் படை வீரர் கொடிநாள் நிதி வசூல் இலக்காக ரூ. 60.12 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்தார்.

நிகழாண்டில் கரூர் மாவட்டத்துக்கு முன்னாள் படை வீரர் கொடிநாள் நிதி வசூல் இலக்காக ரூ. 60.12 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்தார்.
 கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கொடிநாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ், கொடிநாள் வசூலையும், முன்னாள் படைவீரர் நலன் குறித்த விழிப்புணர்வுப் பேரணியையும் தொடங்கி வைத்தார்.
 பின்னர், ஆட்சியரகத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் 12 பயனாளிகளுக்கு ரூ. 1.33 லட்சம்  மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து ஆட்சியர் கோவிந்தராஜ் பேசியதாவது:
தேசத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள முப்படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினரை கெளரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ல் படைவீரர் கொடிநாளாக அரசால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  
 இந்நாளில் கொடிநாள் நிதி வசூல் தொடங்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஆண்டு கரூர் மாவட்டத்துக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ. 54.65 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் ரூ. 60.12 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் கரூர் மாவட்டத்தில் திருமண நிதி,  மனநலம் குன்றிய சிறார்களுக்கான நிதியுதவி என 74 முன்னாள் படைவீரர், அவர்களை  சார்ந்தோர்களுக்கு ரூ. 6.60 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.
 தொகுப்பு நிதியாக வங்கிக்கடன் வட்டி மானியம் என 14 முன்னாள் படைவீரர்களுக்கு  ரூ. 98,000-ம், பிரதமரின் கல்வி உதவித்தொகையாக 12 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 3.21 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.  இதுவரை வேலைவாய்ப்பிற்காக 85 முன்னாள் படைவீரர்கள் பதிவு செய்துள்ளனர்.   இதில் 4 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இதுபோன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிட அரசு தயாராக உள்ளது என்றார். முன்னதாக கரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
 இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் க.ராஜ்மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (சிறுசேமிப்பு) சாந்தி,  (சத்துணவு) வசந்தாகுமாரி, முன்னாள் படைவீரர் நல அலுவலர்கள் வீரபத்திரன், சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com