"எழுத்தாளர்கள், கவிஞர்களை இருக்கும்போதே மதிக்க வேண்டும்'

எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் அவர்கள் உயிரோடு இருக்கும்போதே மதிக்க வேண்டும் என்றார் மதுக்கூர் ராமலிங்கம்.

எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் அவர்கள் உயிரோடு இருக்கும்போதே மதிக்க வேண்டும் என்றார் மதுக்கூர் ராமலிங்கம்.
கரூரில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் ஆகியவற்றின் சார்பில், கடந்த 21-ம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழாவின் 5-ம் நாள் விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மற்றவை நேரில் என்ற தலைப்பில் மேலும் அவர் பேசியது:
அதிகாரமும், அறிவும் நேரெதிரானவை. நம் பிள்ளைகளுக்கு இங்குள்ள அலையாத்திக் காடுகளை காட்டாமல், அமெரிக்காவில் உள்ள அமேசான் காடுகளை காட்டுவதால், பின்நாட்களில் அவர்கள் அங்கேயே சென்றுவிடுகிறார்கள். சைவம், வைணவம் ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட சமய மோதலால்தான் இலக்கியங்கள் பலவற்றை நாம் இழந்தோம். உ.வே. சாமிநாத அய்யர் ஒவ்வொரு மடமாகவும், வீதிவீதியாகவும் சென்று ஓலைச்சுவடிகளை சேகரித்து அதன்மூலம் இலக்கியத்தையும், காப்பியங்களையும் பாதுகாத்திருக்காவிட்டால், இன்று தமிழ் இலக்கியமே இல்லாமல் போயிருக்கும்.
தமிழகத்தில் தமிழ் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் உயிரோடு இருக்கும்போதே மதிக்க வேண்டும். கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பல கவிஞர்களும் இந்த கருத்தையே வலியுறுத்தினர். இலக்கியத்தின் வேலை மனிதனின் ஆழ்மனதிற்குள் அடங்கிக்கிடக்கும் விலங்குத்தன்மையை அகற்றி, அவனுள்இருக்கும் தெய்வத்தன்மையை வெளிக்கொண்டு வருவதுதான். தொலைக்காட்சிகளில் தமிழ்ச் சமூகத்தின் உண்மை பிரச்னைகள் பேசப்படாமல் மறைக்கப்படுகின்றன. புத்தகங்களைப் படித்தால் பாரதிதாசன், பாரதியார் போன்ற 10 பேரை சேர்த்துக்கொள்கிறோம் என்றார்.
முன்னதாக, புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரன் பரிசுகளை வழங்கிப் பேசியது:
புத்தகம் மனிதனை அடக்கக்கூடிய கருவி. நாம் வாழ்க்கைப் பயணத்தில் அறிவை தேடிக்கொண்டிருக்கிறோம். நாம் மற்றவர்களின் அறிவுச்சுடரை தூண்ட நமக்கு புத்தகங்கள் தேவை. நம்மை அழிவில் இருந்து பாதுகாக்கும் கருவி புத்தகங்களே. எந்த ஒரு நூலும் நமக்கு அனுபவத்தை கற்றுத்தரும். இன்றைய விஞ்ஞான வளர்ச்சி நம்மை அழிவுப்பாதைக்கும், அறிவுப்பாதைக்கும் அழைத்துச் செல்கிறது. இதில் நாம் எதை தேர்வு செய்கிறோம் என்பதில்தான் நம் வெற்றி உள்ளது. குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை வாங்கிக்கொடுத்து அவர்களின் வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com