தேசிய நெடுஞ்சாலை மையத் தடுப்பில் கருகும் அரளிச்செடிகள்

சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை மையத்தடுப்பில் நடப்பட்ட அரளிச்செடிகள் போதிய பராமரிப்பின்றி கருகி வருகின்றன.

சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை மையத்தடுப்பில் நடப்பட்ட அரளிச்செடிகள் போதிய பராமரிப்பின்றி கருகி வருகின்றன.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தங்க நாற்கரச் சாலைகள் அமைக்கப்பட்டன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அமைக்கப்பட்ட இந்த சாலையால்  விபத்துகள் அதிகளவில் குறைந்தன. மேலும், நேரவிரயமும் தவிர்க்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் கரூரில் இருந்து மதுரை வரை அமைக்கப்பட்ட சாலையில் மையத்தடுப்பு உருவாக்கப்பட்டது.  இந்த மையத்தடுப்பில் அழகிய வண்ணங்களில் பூக்கும் அரளிச்செடிகள் நடப்பட்டன.
நெடுஞ்சாலைத் துறையினரால் நடப்பட்டு அவர்களால் இந்தச் செடிகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இவை தற்போது போதிய பராமரிப்பின்றி காய்ந்து வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால், அவற்றில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை மாசுவை தடுக்கும் வகையிலும்,  இரவு நேரங்களில் வளைவுகளில் வாகனங்களில் திரும்பும்போது அவற்றின் முகப்பு விளக்குகளில் இருந்து வரும் ஒளிக்கற்றையினால் எதிரெதிர் திசையில் வாகனங்களை ஓட்டிவரும் வாகன ஓட்டிகளின் கண்கள் கூசி விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் இந்த அரளிச் செடிகள் நடப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தச் செடிகளுக்கு நன்கு தண்ணீர் ஊற்றப்பட்டு அவற்றில் பூக்கள் மலர்ந்து கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆனால், தற்போது அவை போதிய பராமரிப்பின்மையால் கருகி, ஏதோ தீ விபத்தில் செடிகள் அழிந்தது போல காட்சியளிக்கின்றன.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பாக இருந்த அரளிச் செடிகள் தற்போது போதிய பராமரிப்பின்மையால் கருகி காணப்படுகின்றன. குறிப்பாக, தடாகோவில், மலைக்கோவிலூர், பெரியமஞ்சுவெளி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் இன்றி செடிகள் அனைத்தும் கருகியுள்ளன.  இதனால், இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், தங்க நாற்கரச் சாலையில் குறைந்தது மணிக்கு 80 கி.மீ. வேகத்தில்தான் பெரும்பாலான வாகனங்கள் செல்கின்றன. எனவே, வாகன ஓட்டிகளின் பாதுகாவலனாக இருக்கும் அரளிச்செடிகளுக்கு மீண்டும் உயிர்கொடுக்க நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com