"நாடு வல்லரசாக மக்கள்தொகை பெருக்கமே தடை'

நம் நாடு வல்லரசாக மக்கள்தொகை பெருக்கம் பெரும் தடையாக உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ்.

நம் நாடு வல்லரசாக மக்கள்தொகை பெருக்கம் பெரும் தடையாக உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ்.
உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணியை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தப் பிறகு ஆட்சியர் மேலும் கூறியது:
நிகழாண்டில் 28-வது உலக மக்கள்தொகை தினத்தை கடைப்பிடிக்கிறோம். ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருத்தை மையமாக வைத்து இது கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழாண்டில், புதிய அலை, புதிய நம்பிக்கை, முழுபொறுப்பு இதுவே. பெண்களின் குடும்பச் சுமையை குறைத்து நாடு நலம்பெற சிறு குடும்ப நெறியை பின்பற்றி பெருகிவரும் மக்கள்தொகையை கட்டுப்படுத்த ஆண்களும் ஒத்துழைக்க வேண்டும்.
மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 148 மனிதர்கள் வசித்தனர். ஆனால், இன்று 555 பேர் வசிக்கின்றனர்.
குடும்பத்தில் அங்கத்தினர் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போவதால் சமுதாயத்தில் வறுமை பெருகும் நிலை ஏற்பட்டுள்ளது. பெருகி வரும் மக்கள்தொகையால் நிலம், நீர், காற்று, சுற்றுச்சூழல் பாதித்து நம் வாழ்வாதாரத்தையும்,  அத்தியாவசிய தேவைகளையும் பாதிக்கிறது. மேலும் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரமும் பாதிக்கிறது.  இந்தியா வல்லரசு நாடாக மாற, மக்கள்தொகை பெருக்கம் ஒரு தடையாக உள்ளது என்றார் ஆட்சியர்.
முன்னதாக, பேரணியில் கரூர் வள்ளுவர் மேலாண்மைக் கல்லூரி,  மலர் மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் விஜயகுமார்,  மருத்துவம் மற்றும் ஊரக நலம் மற்றும் குடும்ப நல துணை இயக்குநர் எலிசபெத்மேரி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் நளினி, கரூர் வட்டாட்சியர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com