மாயனூர் கதவணையில் தூர்வாரும் பணிகள்

மாயனூர் கதவணையில் சுமார் 254 ஹெக்டேரில் மணலை அகற்றி தூர்வாரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மாயனூர் கதவணையில் சுமார் 254 ஹெக்டேரில் மணலை அகற்றி தூர்வாரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
கர்நாடக மாநிலத்தின் குடகு மலையில் உற்பத்தியாகி ஜீவநதியாக ஓடிய காவிரியை தடுத்து அணைகள் பல கட்டப்பட்டாலும், மழைக் காலங்களில் கர்நாடக அணைகளில் நிரம்பி வழியும் உபரிநீர் கிடைத்தால் மட்டுமே தமிழகத்தில் விவசாயம் என்ற நிலைதான் உள்ளது. அவ்வாறு உபரிநீர் தமிழகத்தை வந்தடையும்போது அதனை சேமிக்கும் ஓரே கலனாக உள்ள மேட்டூர் அணை நிரம்பி வழியும்போது, ஆண்டுக்கு 5.40 டிஎம்சி தண்ணீர் வீணாக வங்கக்கடலில் சென்று கலக்கிறது.
இதைத் தடுக்கும் வகையில் மாயனூர் காவிரியில் வாய்க்கால் வெட்டி (பட்டுக்கோட்டை) அக்கினியாறு, (புதுக்கோட்டை) தெற்கு வெள்ளாறு,(தேவகோட்டை) மணிமுத்தாறு (ராமநாதபுரம்) சாயல்குடியில் உள்ள குண்டாறு வரை இணைக்கும் காவிரி-குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தின் (ள்ங்ஸ்ரீர்ய்க்க்ஷஹள்ங்) முதற்கட்டமாக மாயனூரில் கதவணை கட்டப்பட்டது. மழைக்காலங்களில் அதன் உபரிநீரை 1.04 டிஎம்சி சேமிக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த அணை தற்போது வறண்டு குட்டை போல காட்சியளிக்கிறது. இதுதொடர்பாக காவிரி ஆற்றுப் பாதுகாப்பு கோட்டப் பொறியாளர் கூறியதாவது: மாயனூர் கட்டளை கதவணை பகுதியில் உள்ள மணல் திட்டுகளால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது, மேலமாயனூர் வடகரையை உடைத்துக்கொண்டு தண்ணீர் வெளியேறுவதால் அப்பகுதி விவசாயிகள் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், அப்பகுதி விவசாயிகளின் தொடர் கோரிக்கையையடுத்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் மாயனூர் கட்டளைப் பகுதியில் சுமார் 254 ஹெக்டேரில் உள்ள மணல் திட்டுகளை அகற்றி தூர்வார கோரிக்கை விடுத்தோம். அமைச்சகத்தின் ஒப்புதலையடுத்து, மாயனூர் கட்டளை கதவணையில் தூர்வாரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது முதற்கட்டமாக அணையின் கீழ்பகுதியில் திருச்சி மாவட்டம் சீப்பிலாபுதூர், ஸ்ரீராமச்சந்திரபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து அணையின் மேல்பகுதியில் சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரும் பணிகள் நடைபெறும் என்றார்.
பொதுமக்களால் பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு:
மேலமாயனூர் அருகே உள்ள மணல் திட்டை அகற்ற பொதுப் பணித் துறையினர் சனிக்கிழமை காலை பொக்லைன் இயந்திரத்துடன் சென்றுள்ளனர். தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மணல் திட்டுகளால்தான் ஓரளவாவது நீர்மட்டம் குறையாமல் உள்ளதெனக் கூறி, அங்கிருந்த பொக்லைன் இயந்திரங்களை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மாயனூர் போலீஸார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதில், அவர்கள் பொக்லைன் இயந்திரங்களை விடுவித்தனர். இதனால் சுமார் அரை மணிநேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com