ஆயத்த ஆடை தொழிற்கூடத்தை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

தவுட்டுப்பாளையத்தில் ஆபத்தான நிலையில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்கூடத்தை விபத்து ஏற்படும் முன் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தவுட்டுப்பாளையத்தில் ஆபத்தான நிலையில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்கூடத்தை விபத்து ஏற்படும் முன் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையத்தில் திருக்காடுதுறை சாலையில் பொது வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த 1999-2000-ஆம் நிதியாண்டில் ஆயத்த ஆடை தொழிற்கூடம் அமைக்கப்பட்டது. இந்த கட்டடத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் வங்கியில் கடன் பெற்று ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் தொழில் செய்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் அச்சத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினரும் கட்டடத்தை காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டனர். இதனால் கடந்த 2 ஆண்டுகளாக அந்த கட்டடம் பயன்பாடின்றி பூட்டிய நிலையிலேயே உள்ளது. இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கட்டடத்தை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் ஊரக வளர்ச்சி துறை அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், எப்போது இடிந்துவிழுமோ என்ற நிலையில் இருக்கும் இந்த கட்டடத்தை இடிக்குமாறு ஊரக வளர்ச்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறிவிட்டோம். ஆனால் அவர்கள் இதுவரை வந்து பார்வையிடவும் இல்லை. கட்டடத்தை இடிக்க எந்த வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆபத்தான இந்த கட்டடம் அருகேதான் பள்ளி மாணவர்கள், சிறு குழந்தைகள் விளையாடுவார்கள். எனவே ஏதாவது உயிர் பலி ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டடத்தை அகற்ற வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com