"பருவமழையைச் சமாளிக்க ஒருங்கிணைந்த செயல்பாடு தேவை

வடகிழக்குப் பருவமழையைச் சமாளிக்கும் வகையில் கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 6 கண்காணிப்புக் குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ்.

வடகிழக்குப் பருவமழையைச் சமாளிக்கும் வகையில் கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 6 கண்காணிப்புக் குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ்.
கரூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து மேலும் அவர் பேசியது:
கரூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் மாவட்டத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் 6 வட்டங்களுக்கும் அமைக்கப்பட்டுள்ள 6 கண்காணிப்பு குழுக்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பொதுப் பணித் துறையினர் கண்மாய்கள், பாசனக் கால்வாய்கள் ஆகியவற்றை அவ்வப்போது கண்காணித்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அவற்றை சரிசெய்ய மணல் மூட்டைகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
மாவட்ட வழங்கல் துறையினர் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே தேர்வு செய்து அங்குள்ள மக்களுக்கேற்ப நியாயவிலைக்கடைகளில் அரிசி, பருப்பு, மண்ணெண்ணை போன்றவற்றை இருப்பில் வைக்க வேண்டும்.
பொது சுகாதாரத் துறையினர் தொற்றுநோய் பரவாமல் இருக்க ஒவ்வொரு பகுதியிலும் மருத்துவ முகாம் அமைத்துச் செயல்பட வேண்டும். அதேபோல் கால்நடை பராமரிப்புத் துறையும் முகாம் அமைத்து கால்நடைகளை பாதுகாத்து வர வேண்டும். தீயணைப்புத் துறையினர் ஆற்றின் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மீட்புக்குழு, படகுகளை தயாராக வைத்திருக்க வேண்டும்.
நெடுஞ்சாலைத் துறையினர் சாலைகள் சேதமடைவதைக் கண்காணித்து உடனடியாக சரிசெய்ய வேண்டும். வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள், அரசு பள்ளி வளாகங்களில் தங்க வைக்க முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து மழையால் எந்த பாதிப்பும் இல்லாத நிலையை எய்திடும் வகையில் பணியாற்றிட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கவிதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிவப்பிரியா, கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com