வீணாகும் அமராவதி ஆற்று நீர்; கதவணை கட்ட வலியுறுத்தல்

அமராவதி ஆற்றின் நீரைச் சேமிக்காததால் அரை டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதாக புகார் கூறும் விவசாயிகள், இனி வரும் காலங்களிலாவது நீரைச் சேமிக்க கோயம்பள்ளியில் கதவணை கட்டும்

அமராவதி ஆற்றின் நீரைச் சேமிக்காததால் அரை டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதாக புகார் கூறும் விவசாயிகள், இனி வரும் காலங்களிலாவது நீரைச் சேமிக்க கோயம்பள்ளியில் கதவணை கட்டும் பணியை விரைந்து தொடங்க வலியுறுத்தியுள்ளனர்.
சங்க காலத்தில் ஆம்பிராவதி என்றழைக்கப்பட்ட அமராவதி நதி ஆனைமலைத்தொடருக்கும், பழனிமலைத்தொடருக்கும் இடையே உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகிறது.
கரூர், திருப்பூர் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த இந்த நதி கடந்த இரு ஆண்டுகளாக மழையின்றி வறண்டு காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆக. மாத கடைசி முதல் செப். முதல் வாரம் வரை பழனிமலைக் குன்றுகளில் பெய்த கடும் மழையால் அமராவதியின் துணை நதிகளான நங்காஞ்சி மற்றும் குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் 2 நாள்களாக அமராவதி ஆற்றில் வினாடிக்கு 2,000 கன அடி நீர் வந்தது, பின்னர் பழனிமலைக் குன்றுகளில் மழை குறைந்ததால் அமராவதி ஆற்றில் வெள்ளமும் குறைந்தது. கடந்த இரு ஆண்டுகளாக அமராவதி ஆற்றில் தண்ணீரையை காண முடியாமல் தவித்த மக்கள் ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீரைக் கண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.
கரூர் மாவட்டத்தில் ராஜபுரம், அணைப்பாளையம், ஆண்டாங்கோயில் கீழ்பாகம், செட்டிப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பணைகள் இருந்தாலும் அவற்றில் தலா அரை டிஎம்சிக்கும் குறைவாகவே நீரைச் சேமிக்க முடிகிறது.
மேலும் கரூர் அருகே ஆண்டாங்கோயில் கீழ்பாகத்தில் கட்டுப்பட்டுள்ள புதிய தடுப்பணையைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடியதை மக்கள் தினம்தோறும் கண்டு மகிழ்ந்தனர். ஆனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதும் அந்த நீர் வீணாக வங்கக்கடலில் சென்று கலந்தது. இதனால் அமராவதி ஆற்றில் கோயம்பள்ளியில் சுமார் 1 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்க வழிவகுக்கும் வகையில் கதவணை கட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட நிலத்தடிநீர் மட்டம் மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கச் செயலர் ராமலிங்கம் கூறியது:
அமராவதி நதி நீரால் கரூர், திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 60,000 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெற்றன. இப்போது அமராவதி ஆற்றின் கடைமடைப் பகுதியான கரூர் மாவட்டத்தில் சுமார் 2,000 ஏக்கர் நிலங்கள்கூட பாசன வசதி பெற முடியவில்லை. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே அணை நீர் பங்கீட்டில் மோசடி நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விடாமல், தங்களது வாய்க்கால்களுக்கு அவ்வப்போது அங்குள்ள அதிகாரிகளை மிரட்டி தண்ணீரைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதைத் தட்டிக்கேட்க இங்கு அதிகாரிகளும் இல்லை, அரசியல்வாதிகளும் இல்லை. தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக அமராவதி நதி நீர் பங்கீட்டில் வஞ்சிக்கப்படுகிறோம்.
இந்நிலையில் அமராவதி நதியின் துணை நதிகளான நங்காஞ்சி, குடகனாற்றில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அமராவதி ஆற்றில் தண்ணீர் அதிகளவு ஓடியது. வினாடிக்கு 2,000 கனஅடி நீர் சென்றது. மூன்று நாட்களாக சென்ற நீர் கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு பயன்பட்டதா என்றால் இல்லை. அந்த நீர் திருமுக்கூடலூர் சென்று காவிரியுடன் கலந்துவிட்டது. காவிரியில் செல்லும் நீர் பின்னர் வீணாக வங்கக் கடலில்தான் கலக்கும். அமராவதி ஆற்றில் தண்ணீர் வருவதே கானல் நீராக இருக்கும் நிலையில் வந்த தண்ணீரையும் சேமிக்க போதிய தடுப்பணைகளோ, பெரிய அளவிலான கதவணைகளோ கிடையாது.
கோயம்பள்ளியில் சுமார் 1 டிஎம்சி தண்ணீர் சேமிக்கும் வகையில் அனைத்து வசதிகளும் உள்ளது. இதுதொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், அரசியல்வாதிகளிடமும் கோரிக்கை மனு கொடுத்துவிட்டோம். ஆனால் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையில் அமராவதி ஆற்றில் சுமார் அரை டிஎம்சி தண்ணீர் வீணாகியிருக்கும். இனியாவது கோயம்பள்ளியில் கதவணை கட்ட அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக அமராவதி வடிநிலக் கோட்ட அதிகாரி பூபதியிடம் கேட்டபோது, நான் இப்போதுதான் கரூருக்கு அதிகாரியாக வந்துள்ளேன். எனக்கு அமராவதி நதியில் தற்போது பெய்த மழையில் எந்த அளவுக்கு தண்ணீர் வீணானது எனத் தெரியவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com