ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கத்தொகை குறைப்பு: நெருக்கடியில் கரூர் ஜவுளி தொழில்

ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையை மத்திய அரசு 9 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக திடீரென குறைத்துள்ளது. இதனால் ஜவுளித்தொழிலுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையை மத்திய அரசு 9 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக திடீரென குறைத்துள்ளது. இதனால் ஜவுளித்தொழிலுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியில் கரூருக்கு தனி இடம் உண்டு.  இங்கிருந்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மன், டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு வீட்டு உபயோக ஜவுளிகளான திரைச்சிலைகள், மெத்தை விரிப்புகள், கால் மிதியடிகள், கையுறைகள்,  துண்டுகள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி முதல் 4,000 கோடி வரை அன்னிய செலாவணியை நாட்டுக்கு ஈட்டித்தரும் கரூர் மாவட்டத்தின் ஜவுளி தொழில், சாயப்பட்டறைகள், சலவைப்பட்டறைகள் போதிய அளவில் இல்லாததால் ஏற்கெனவே கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்த ஊக்கத்தொகையை 2 சதவீதமா குறைத்துள்ளதால், இத்தொழில் மேலும் நசிவடைந்து அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, கரூர் மாவட்ட வீட்டுஉபயோக ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர் ஆர். ஸ்டீபன்பாபு கூறியது:
கரூர் மாவட்ட வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.  ஆனால், மத்திய அரசு தொடர்ந்து இத்தொழிலுக்கு கொடுத்து வரும் நெருக்கடியால், ஜவுளி ஏற்றுமதி தொழில் நசிவடைந்து வருகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு கொண்டுவந்தது.
இந்த வரியால், இன்வாய்ஸ் முதல் சரக்கை கப்பலில் ஏற்றுவது வரை பல சிக்கலான முறையை மத்திய அரசு புகுத்தியுள்ளது. சரக்கை கப்பலில் ஏற்றும்போது, வங்கிக்கான பாதுகாப்பு பத்திரத்தை சுங்கவரித் துறையினர் கேட்கின்றனர்.
இதுகுறித்து வங்கியில் கேட்டால், அதுபோன்ற நடைமுறையே இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த பிரச்னையே இன்னும் முடிவடையவில்லை. அதற்குள் ஜவுளி ஏற்றுமதியை நசிக்கும் வகையில், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஏற்றுமதியாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த  9 சதவீத ஊக்கத்தொகையை 2 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது.
இது இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளுக்கு ஜவுளிப்பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது அங்குள்ளவர்கள் திடீரென சரக்கு சரியில்லை என திருப்பி அனுப்பிவிட்டால், அரசு தரும் ஊக்கத்தொகையை கொண்டு இழப்பை ஈடுகட்டினோம். இனி அதற்கான வாய்ப்பே இல்லாமல் ஆகிவிட்டது.
ஏற்கெனவே, கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாயப்பூங்கா இல்லாமல் துணிகளை சாயமேற்றுவதற்கும், சலவை செய்வதற்கும்,  திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்குச் சென்று அதிகம் செலவழித்து துணிகளுக்கு சாயமேற்றி வருகிறோம். இதன்மூலம், குறைந்த லாபத்தில் தொழிலை நடத்தி வருகிறோம்.
இந்நிலையில், மத்திய அரசின் ஊக்கத்தொகை குறைப்பு நடவடிக்கை எங்களுக்கு மேலும் மனச்சோர்வை அளித்துள்ளது. எனவே, மத்திய அரசு இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெறவேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com