கரூரில் செந்தில்பாலாஜியின் நண்பர் நிதிநிறுவனத்துக்கு சீல்

கரூரில் செந்தில்பாலாஜியின் நண்பர் தாரணி சரவணனின் நிதிநிறுவனத்துக்கு வருமானவரித் துறையினர் சனிக்கிழமை சீல் வைத்தனர்.

கரூரில் செந்தில்பாலாஜியின் நண்பர் தாரணி சரவணனின் நிதிநிறுவனத்துக்கு வருமானவரித் துறையினர் சனிக்கிழமை சீல் வைத்தனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள், ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களில் கடந்த 21-ம் தேதி முதல் திருச்சி, மதுரை, கோவை மண்டலங்களைச் சேர்ந்த வருமானவரித் துறை அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டதிலிருந்து சசிகலாவின் ஆதரவாளராக முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி செயல்பட்டு வருகிறார். இதனிடையே, அவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது கரூர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி கொண்டுவர அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மூலம் முயற்சி செய்தார். இதைத்தொடர்ந்து, 110 விதியின் கீழ் கரூர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரியை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அப்போது, வாங்கல் குப்புச்சிபாளையம் பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த இடம் கல்லூரி அமைய தகுதியற்றது என்றும், கரூர் நகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டியில் கல்லூரி அமைக்க வேண்டும் எனவும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பிரபு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இதை எதிர்த்து வாங்கல்குப்புச்சிபாளையத்தில் கல்லூரிக்கு இடம் தானமாக கொடுத்த தியாகராஜன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்நிலையில், வாங்கல் குப்புச்சிபாளையத்தில் வாங்கப்பட்ட இடம், முதல் நாள் வாங்கி, மறுநாளே இடம் பதிவுசெய்யப்பட்டுள்ளது, மேலும், ரியல் எஸ்டேட் தொழிலுக்காகவே இந்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது என கூறி, அந்த இடத்தை ரத்துசெய்து, சணப்பிரட்டியில் கல்லூரி கட்டிக்கொள்ளலாம் என அண்மையில் நீதிமன்றம் அறிவித்தது.
இதனால், வாங்கல் குப்புச்சிபாளையத்தில் கல்லூரிக்கு இடம் கொடுத்த தியாகராஜன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள், நண்பர்களின் வீடு, அலுவலகங்கள், நிதிநிறுவனங்கள், ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களில் கடந்த 21-ம் தேதி முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் இந்த சோதனை தொடர்ந்தது.
இந்நிலையில், கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள, செந்தில்பாலாஜியின் நண்பரும், அதிமுக முன்னாள் நகர அவைத் தலைவருமான தாரணி சரவணனுக்குச் சொந்தமான நிதிநிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, கடந்த வியாழக்கிழமை அதிகாரிகள் சோதனை செய்ய சென்றனர். ஆனால், அந்த அலுவலகம் பூட்டிக்கிடந்தது. இந்நிலையில், சனிக்கிழமையும் அலுவலகம் பூட்டியிருந்ததால், அந்த அலுவலகத்திற்கு சீல் வைத்த வருமானவரித் துறையினர், கதவில் நோட்டீசும் ஒட்டினர்.
இந்த நோட்டீசில், நிறுவனத்தை திறக்கவோ, உள்ளே இருந்து பொருட்களை வெளியே எடுத்துச் செல்லவோ, வெளியே இருந்து உள்ளே பொருட்கள் கொண்டு செல்வதற்கோ தடைவிதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கரூரில் மூன்றாவது நாளாக நடைபெற்ற சோதனையில் சுமார் ரூ. 80 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், அதிகாரிகள் சோதனை குறித்து இதுவரை எதுவும் கூறாததால், யார், யார் எவ்வளவு வரி ஏய்ப்பு செய்துள்ளனர், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதா என்ற முழுவிவரம் தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com