கருணாநிதியின் உடல் அடக்கத்தை அரசியலாக்காதீர்

கருணாநிதியின் உடல் அடக்கத்தை அரசியலாக்காதீர் என்றார் மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை.

கருணாநிதியின் உடல் அடக்கத்தை அரசியலாக்காதீர் என்றார் மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை.
கரூரில் வியாழக்கிழமை வெ. பசுபதிபாளையம், வெண்ணைமலை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும்  கூறியது:
நடிகர் ரஜினிகாந்த் இன்னமும்  கட்சி தொடங்கவில்லை. எனவே அவரது குற்றச்சாட்டுகளை பெரிதாக எடுத்துக்கொண்டு பதில் அளிக்க விரும்பவில்லை. 
மறைந்த முதல்வர் கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் நான் ஆகிய மூவரும் சென்று அஞ்சலி செலுத்தினோம்.   தமிழக அரசு சார்பில் கருணாநிதிக்கு என்ன மரியாதை செய்ய வேண்டுமோ அது செய்யப்பட்டது. 
எம்ஜிஆர், ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் அங்கு வந்தார்கள்,  இருந்தார்கள்? எனவே வெறுமனே  குறை சொல்லக் கூடாது.  அண்ணா, எம்ஜிஆர்  உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தையே காலி செய்ய வேண்டும் என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. ஆகவே சட்டச் சிக்கல் இருந்ததால் கிண்டியில் இடம் ஒதுக்குவதாக முதல்வர் தெரிவித்தார். பின்னர் நீதிமன்றத்திற்குச் சென்று வழக்குத் தொடர்ந்து கருணாநிதியை மெரீனாவில் அடக்கம் செய்தார்கள். அதை தமிழக அரசும் ஆட்சேபிக்கவில்லை. எனவே கருணாநிதி உடல் அடக்கத்தை அரசியல் ஆக்காதீர்கள். 
கருணாநிதி முதல்வராக எம்.ஜி.ஆர். உழைத்தார். ஆனால் அவரைக் கட்சியில் இருந்து நீக்கியதால் இந்த இயக்கம் உருவானது. அதிமுக தனிப்பட்ட ஒருவரால் தொடக்கப்பட்ட இயக்கம் அல்ல, அது மக்கள் இயக்கம் என்றார் அவர்.
பின்னர் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் கரையோரம் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைப் பார்வையிட்ட பின் கூறுகையில், வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இங்குள்ள 55 குடும்பங்களைச் சேர்ந்த 157 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு அங்குள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
சில இடங்களில் வெள்ளநீர் விவசாய நிலங்களுக்கும் புகுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி-குண்டாறு நதிகளை இணைக்க நாடாளுமன்றத்தில் குரல்கொடுத்து விரைவில் இத்திட்டத்தை நிறைவேற்றுவோம். தற்போது காவிரி ஆற்றில் தடுப்பணைகள் கட்ட இயலாது. ஏனெனில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் கட்டுவது சாத்தியம் கிடையாது என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com