நெசவாளர்களுக்கு போதிய வசதிகள்: அமைச்சர் உறுதி

கரூர் மாவட்டத்தில் அனைத்து நெசவாளர்களுக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.  

கரூர் மாவட்டத்தில் அனைத்து நெசவாளர்களுக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.  
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம், மாரியம்மன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ் தலைமையில் ரூ. 50,000 மதிப்பில் கைத்தறி உபகரணங்கள் மற்றும் 25 நெசவாளர்களுக்கு  ரூ.7.50 லட்சம் மதிப்பில் முத்திரா கடனுதவிகளை வெள்ளிக்கிழமை  வழங்கி மேலும் அவர் பேசியது:
இந்தியாவில் கைத்தறி தொழில் பாரம்பரியமிக்கதாகும்.  கரூரில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக நெசவுத்தொழிலை 25,000 நெசவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.  இத்தகைய நெசவாளர்கள் மற்றும் நெசவுத்தொழில் சார்ந்தோரின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு வழங்கி வருகிறது.  
கரூர் மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 2017-2018 ஆம் நிதியாண்டில் 565 நெசவாளர்களுக்கு ரூ. 28.25 கோடியில் முத்ரா திட்டத்தின் கீழ் குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.  வெள்ளிக்கிழமை மட்டும் இத் திட்டத்தின் கீழ் 25 நெசவாளர்களுக்கு ரூ. 7.50 இலட்சம் மதிப்பில் முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டது.  
இதுபோன்று கைத்தறி பெருங்குழுமம் திட்டத்தின் கீழ் 573 நெசவாளிகளுக்கு ரூ.1.50 கோடியில் தறி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.  நெசவாளர்கள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி மேம்பாடு அடைந்து கரூர் மாவட்டத்திலுள்ள 55 கூட்டுறவுச் சங்கங்களும் லாபத்தில் இயங்க வேண்டும்.  ஆரம்பத்தில், உள்நாட்டுத் தேவைகளுக்கு மட்டுமே இருந்த நெசவுத்தொழில் தற்போது உலக நாடுகளில் ஆண்டுக்கு ரூ.3,000 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யத்தக்க வகையில் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது.  தொடர்ந்து வளர்ச்சி பெற கரூர் மாவட்டத்தில் அனைத்து நெசவாளர்களுக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ  எம். கீதாமணிவண்ணன்,  கோவை தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழக துணை மேலாளர் ஏ.பி. கந்தசாமி, நெசவாளர் சேவை மைய துணை இயக்குநர் வாசு, யூகோ வங்கி முதுநிலை மேலாளர் பி. இருசப்பராஜா, இந்திய ஆயுள் காப்பீட்டுத் திட்ட மேலாளர் இளங்கோ, இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் கே. ராதாகிருஷ்ணன், கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com