புரோ கபடிக்கு இணையான கபடி  போட்டி கரூரில் இன்று தொடக்கம்

புரோ கபடிக்கு இணையாக கரூரில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டி சனிக்கிழமை தொடங்கி 3 நாள் நடைபெறுகிறது

புரோ கபடிக்கு இணையாக கரூரில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டி சனிக்கிழமை தொடங்கி 3 நாள் நடைபெறுகிறது என்றார்  போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
போட்டிகள் நடைபெறும் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் சீரமைப்புப் பணி நடைபெறுவதை வெள்ளிக்கிழமை பார்வையிட்ட  அமைச்சர் மேலும் கூறியது:
தமிழகத்தை ஜெயலலிதா வழியில் ஆண்டு கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரது ஆணைப்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் முதல்வர் கோப்பைக்கான கபடி போட்டி கரூரில் முதன் முறையாக நடைபெறுகிறது.
இதில் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 32 ஆண்கள் அணி, 32 பெண்கள் அணிகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தியாவிலே எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத  வகையில் போட்டியில் முதல் பரிசாக  ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் வீதம் 12 பேருக்கு  ரூ. 12 லட்சமும், 2-வது பரிசாக ஒரு நபருக்கு ரூ. 75,000 வீதம், 12 பேருக்கு ரூ. 9 லட்சமும்,  3-ம் பரிசாக நபருக்கு ரூ. 50,000 வீதம் 12 பேருக்கு ரூ. 6 லட்சமும் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் முதன்முறையாக இப்போட்டியை கரூரில் நடத்தும் வாய்ப்பை முதல்வர் வழங்கியிருக்கிறார். மேலும் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் புரோ கபடி போட்டிக்கு இணையாக மேட் அமைத்து நவீன வசதியுடன் இந்த போட்டியை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.  தமிழகம் விளையாட்டுத் துறையில் முதலிடம் பெறுவதற்காக மறைந்த முதல்வர் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்தார். அவரது பிறந்த நாளில் இந்த போட்டிகள் கரூரில் நடைபெற உள்ளன என்றார் அமைச்சர். கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com