விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை: ஆட்சியர் அறிவுறுத்தல்

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ். 

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ். 
கரூர் ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்தில்  விவசாயிகள் தரப்பில் ஏற்கெனவே வழங்கப்பட்ட 19 மனுக்கள் மீது நடந்த விவாதங்களின் விவரம்: 
கோரக்குத்தி கே. சுப்புராயன் பேசுகையில், மணவாசி கிராமத்தில் அமைந்துள்ள மஹா அக்ரிகல்சுரல் புராடக்ட்ஸ் நிறுவனத்தால் அருகிலுள்ள பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்றார். இதற்குப் பதில் அளித்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ராஜேந்திரபாபு, இதுதொடர்பாக கடந்த 19-ம் தேதி நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இசைவாணையில் குறிப்பிட்டுள்ளபடி கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு மறு சுழற்சியாக பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது. மேலும் இந்நிறுவனம் தொடர்ந்து கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை  இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, இந்த நிறுவனம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்றார். பின்னர் ஆட்சியர், கோட்டாட்சியர், அதிகாரிகள் வந்து ஆய்வு செய்வர் என்றார்.
இதையடுத்து வேலம்பாளையம் விவசாயி வி. பூபதி பேசுகையில், எங்கள்பகுதியில் பவர் கிரீட் மூலம் மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது. விளைநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்பாதைக்கு மரங்களுக்கு மட்டும் இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால்  நில இழப்பீடு தொகை வழங்கவில்லை, எனவே நில இழப்பீடு தர வேண்டும் என்றார். 
இதுதொடர்பாக பவர்கிரீட் அதிகாரிகளிடம் ஆட்சியர், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்றவாறு உடனே அந்த பகுதியில் உள்ள நிலத்தின் மதிப்பீட்டுக்கு ஏற்றவாறு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மொஞ்சனூர் சந்திரசேகர் பேசுகையில், வேளாண் துறையால் வழங்கப்படும் புல்வெட்டும் கருவி, தட்டு வெட்டும் கருவி, மினி டிராக்டர்,  பவர் டில்லர் போன்ற கருவிகளை மானிய விலையில் வழங்குமாறு பலமுறை கேட்டும் அதிகாரிகள் வழங்கவில்லை என்றார். 
அப்போது ஆட்சியர்,  விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உடனே நடவடிக்கை எடுங்கள் என்றார்.  சின்னதேவன்பட்டி விகே. தங்கவேல் பேசுகையில், கடவூர் ஏரி வழியாக காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டக்குழாய்கள் செல்கின்றன. 
இந்த குழாய்கள் மூலம் கடவூர் ஏரியை நீரால் நிரப்ப வேண்டும். இதற்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மனுதாரரின் கேட்டுக் கொண்டுள்ளபடி தற்போது குழாய் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டம் இல்லை என்றனர். 
இதற்கு ஆட்சியர், உடனே திட்டம் இல்லை எனக் கூறாதீர்கள்., இதற்கான திட்ட அறிக்கையைத் தயார் செய்து அரசுக்கு அனுப்புங்கள் என்றார். கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் பாஸ்கரன் மற்றும் விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com