அறிவியல் கண்காட்சி; மாணவருக்குப் பாராட்டு

சென்னையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற தேசியளவிலான அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பெற்ற கரூர் மாணவருக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

சென்னையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற தேசியளவிலான அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பெற்ற கரூர் மாணவருக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கரூரைச் சேர்ந்த ஆர். மோகன்குமார், ராணி ஆகியோரின் மகன் ஆர்.எம். விநாயக். இவர் நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.  இவர் சென்னையில் அறிவியல் கண்காட்சியில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் குறித்து உடனுக்குடன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் தெரிவித்து அதன் மூலம் தொழிற்சாலையின் கழிவுகள் நீர்நிலைகளில் கலந்து மாசு ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் கண்டுபிடித்து காட்சிப்படுத்திய கருவிக்கு முதல் பரிசு கிடைத்தது.
இதையடுத்து அந்த மாணவருக்கு கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவுக்குத் தலைமை வகித்த  ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் என். பொன்னுசாமி பேசியது:
இன்றைய மாணவர்களை மதிப்பெண் பெறும் கருவிகளாகத்தான் பெற்றோர் பார்க்கிறார்கள்.  மதிப்பெண் மட்டுமே மாணவர்களை உயர் நிலைக்கு கொண்டு செல்லாது.  மாணவர்களின் எண்ணங்களை அறிந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். கருத்துகளை அவர்களிடம் திணிக்கக் கூடாது.  இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் உருவாகி தற்கொலை  மன நிலைக்குச் செல்கிறார்கள். முன்பெல்லாம் 5 வயது கடந்த பின்னர்தான் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தார்கள். ஆனால் இப்போது பிறந்த இரு ஆண்டுகளிலேயே பிஞ்சுக் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து அவர்களின் எண்ணங்களை நசுக்குகிறார்கள். 
குடிநீர் 2025-ல் அரிதான பொருளாக மாறிவிடும். 1000 அடி தோண்டினாலும் நீர் கிடைப்பதில்லை. எனவே வருங்காலங்களில் நீரை சேமிக்கும் நிலையில் உள்ளோம்.  இதுபோன்ற கண்டுபிடிப்புகள் மூலம் கழிவு நீரை நீர்நிலைகளில் விட்டு அவற்றை மாசுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமை என்றார்.
 தமிழ்நாடு அறிவியல் இயக்க கரூர் மாவட்ட கௌரவத் தலைவர்  சி. ராமசுப்ரமணியம், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெரால்டு உள்ளிட்டோர் வாழ்த்தினர். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியை ஏ. ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  எவர்கிரீன் பவுண்டேசன் தலைவர் எம்.ஏ. ஸ்காட் தங்கவேல் வரவேற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com