முருங்கை விலை கடும் வீழ்ச்சி; விவசாயிகள் விரக்தி

கரூர் மாவட்டத்தில் முருங்கைக்காய் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கிலோ ரூ.2-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் முருங்கைக்காய் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கிலோ ரூ.2-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, தடாகோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான கொத்தப்பாளையம், ஈசநத்தம், அம்மாபட்டி, சாந்தப்பாடி, ஆலமரத்துப்பட்டி, வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 25,000 ஏக்கரில் முருங்கை சாகுபடி தீவிரமாக நடைபெறுகிறது. 
இந்தப் பகுதிகளில் முக்கிய வேளாண் தொழிலாகவும் முருங்கை சாகுபடி உள்ளது.  மிகுந்த லாபம் தரும் வகையில்  விளையும் முருங்கைக்காய் திரட்சியாகவும், சுவைமிக்கதாகவும் உள்ளதால் கரூர் மாவட்டம் இன்றி சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும்,  குஜராத், மேற்குவங்கம், கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களுக்கும் இங்கிருந்து அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது சீசன் காலம் என்பதால் நாள்தோறும் சுமார் 15-க்கும் மேற்பட்ட லாரிகளில் முருங்கைக்காய் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் தற்போது முருங்கை நல்ல விளைச்சல்  கண்டும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக நாம் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வுச் சங்க கரூர் மாவட்டத் தலைவர் செல்வராஜ் கூறுகையில், இங்கு விளையும் முருங்கைக்காய்களை வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து உள்மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.  முருங்கை விலை கடந்த ஜனவரி மாதம் கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை போனது. இந்நிலையில் கடந்த மாதம் கிலோவுக்கு ரூ.50 வரை குறைந்து ரூ.150-க்கு விற்றது. 
இப்போது ஈசநத்தம் உள்ளிட்ட சந்தைகளில்  முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து கிலோ ரூ. 2-க்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் காய் பறிக்க வரும் தொழிலாளர்களுக்கு கூலி கூட வழங்க இயலாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.  இதுபோன்ற இடர் நேரங்களில் விவசாயிகளைக் காப்பாற்றும் வகையில் அரவக்குறிச்சி தொகுதியில் முருங்கைகாய் பவுடர் தயாரிக்கும் ஆலைகளோ அல்லது முருங்கைக்காய் கொண்டு மதிப்புக்கூட்டப்பட்ட  பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களையோ தொடங்க 
வேண்டும் என பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
எனவே விரைவில் தமிழக அரசு இதுபோன்ற ஆலைகளை அமைக்க முன்வருவது முருங்கை சாகுபடி தொடர்ந்து நடைபெற வழிவகுக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com