கரூரில் பலத்த மழை: மழை நீரோடு ஓடிய கழிவு நீரால் அவதி

கரூரில் வெள்ளிக்கிழமை மாலை சுமார் முக்கால் மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்தோடியது.

கரூரில் வெள்ளிக்கிழமை மாலை சுமார் முக்கால் மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்தோடியது. சில இடங்களில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து வாய்க்காலை விட்டு வெளியேறி சாலைகளில் ஓடியதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்கிறது. குறிப்பாக கடந்த 4-ம் தேதி அக்கினி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் தொடங்கியது முதலே நல்ல மழை பெய்கிறது. இதனால் கோடை வெப்பத்திற்கு மக்கள் ஆளாகாமல்  மகிழ்ச்சியில் உள்ளனர்.  கரூரில் வெள்ளிக்கிழமை காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் வெப்பத்தின் உஷ்ணத்தை உணர முடிந்தது. இருப்பினும் மாலை 4.40 மணியளவில் திடீரென கருமேகங்கள் உருவாகி சிறிது நேரத்திலேயே மழை பெய்யத்தொடங்கியது. 
கரூர் நகர்ப் பகுதியில் சுமார் முக்கால் மணி நேரம் பெய்த பலத்த மழையால் உழவர்சந்தை ரவுண்டானா, திருமாநிலையூர் ரவுண்டானா, லைட்ஹவுஸ் கார்னர், சுங்ககேட் ஆதிபேக்கரி, திருக்காம்புலியூர் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் செல்ல வழியின்றி அப்பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் கலந்து சாலைகளில் வெள்ளம்போல ஓடியது. இதனால்  துர்நாற்றம் வீசி பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். 
எனவே நகரில் உள்ள கழிவு நீர் வாய்க்கால்களை அகலப்படுத்தி மழைநீர் தங்கு தடையின்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கரூரில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை பெய்த மழை அளவு (மி.மீட்டரில்): கரூர்-5.2, அரவக்குறிச்சி-3.2, அணைப்பாளையம்-16.1, க.பரமத்தி-33.4, குளித்தலை-4, தோகைமலை-32, கிருஷ்ணராயபுரம்-1, மாயனூர்-1, பஞ்சப்பட்டி-41, கடவூர்-42.4, பாலவிடுதி-82, மைலம்பட்டி-44 என மொத்தம் 305.30 மி.மீ. மழை பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com