வேகமாக இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் உரிமம் ரத்து: போக்குவரத்து துறை அமைச்சர்

வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டும் கூடுதல் வேகத்தில் இயக்கப்படும் பள்ளி, கல்லூரி வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டும் கூடுதல் வேகத்தில் இயக்கப்படும் பள்ளி, கல்லூரி வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
கரூர் - சேலம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள அட்லஸ் கலையரங்கம் பகுதியில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன், அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர். இதன்பின்னர், வாகன ஓட்டுநர்களுக்கு நடைபெற்ற ரத்த தான முகாம், மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் அவசர கால செயல்விளக்க பயிற்சி ஆகியவற்றை பார்வையிட்ட அமைச்சர் மேலும் பேசியது:
கரூர் மாவட்டத்திலுள்ள 96 பள்ளிகளைச் சேர்ந்த 770 வாகனங்களில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், 620 வாகனங்களின் ஆய்வு முடிவுற்றன. தற்போது 21 கல்லூரிகளைச் சேர்ந்த 263 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின்போது வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டி, தீ தடுப்பாண், படிக்கட்டுகளின் உயரம், அவசரகால வழி உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரையிலான ஆய்வின் போது 9 வாகனங்கள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் ஆண்டுதோறும் 1,50,000 நபர்களும், தமிழக அளவில் 17,000 நபர்களும் சாலை விபத்தில் இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே ஓட்டுநர்கள் அனைவரும் சாலை விதிகளை கடைப்பிடித்து விபத்தில்லா சமுதாயத்தை உருவாக்க முன்வர வேண்டும். பள்ளி, கல்லூரி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாட்டு கருவியின் அளவை விட கூடுதல் வேகத்தில் இயக்கப்படும் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், நகர காவல் துணை கண்காணிப்பாளர் கும்மராஜா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் து.கணேஷமூர்த்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் க.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com