டெல்டா விவசாயிகளைக் காக்க மணல் அள்ளுவதை நிறுத்த வேண்டும்

காவிரி டெல்டா பகுதி விவசாயிகளைப் பாதுகாக்க காவிரியில் அரசு மணல் அள்ளுவதை நிறுத்த வேண்டும்

காவிரி டெல்டா பகுதி விவசாயிகளைப் பாதுகாக்க காவிரியில் அரசு மணல் அள்ளுவதை நிறுத்த வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் இரா. நல்லகண்ணு.
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த மணத்தட்டை அரசு மணல் குவாரி மற்றும் ராஜேந்திரத்தில் உள்ள அரசு மணல் இருப்பு மற்றும் விற்பனை நிலையத்தை  காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் வியாழக்கிழமை பார்வையிட்ட அவர் பின்னர்  கூறியது:
தமிழக அரசு அனைத்துத் துறைகளிலும் ஊழலில் ஈடுபடுகிறது. குறிப்பாக மணல் அள்ளுவதில் அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் தவறான வழியில் பணம் சம்பாதித்து வருகின்றனர். கூட்டுக் குடிநீர் திட்டக் கிணறு மற்றும் பாலம் ஆகியவற்றிற்கு 500 மீட்டர் சுற்றளவிற்கு மணல் எடுக்கக் கூடாது என விதிமுறை இருந்தும் குளித்தலையை அடுத்த மணத்தட்டை பகுதியில் மருங்காபுரி கூட்டுக் குடிநீர் கிணறு அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் சுமார் 40 அடி ஆழத்துக்கு விதிமீறி மணல் அள்ளி வருகின்றனர். 
குளித்தலை - முசிறி காவிரிப் பாலத்தின் அருகிலும் விதிமீறி மணல் அள்ளி வருவதால் முக்கொம்பு கொள்ளிடம் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதுபோல குளித்தலை முசிறி பாலம் அடித்து செல்லப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ராஜேந்திரத்தில் செயல்படும் அரசு மணல் விற்பனை நிலையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. இந்த மணல் விற்பனை நிலையமே முறையான அனுமதியின்றி செயல்படுகிறது.  காவிரியில் அதிகளவில் மணல் கொள்ளை அடிக்கப்பட்டதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும் கடைமடைப் பகுதிக்கு காலதாமதமாக குறைந்தளவு நீரே சென்றடைந்தது. காவிரி டெல்டா பகுதி விவசாயிகளை பாதுகாக்க இனிவரும் காலங்களில் காவிரியில் தமிழக அரசு மணல் அள்ளுவதை நிறுத்த வேண்டும் என்றார் அவர்.  காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com