வெளிமாநில குழந்தைகளுக்கு அரசுப் பள்ளியில் சிறப்பு வகுப்பு

கரூரில் தங்கிப்பணிபுரியும் மேற்குவங்க தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அவர்களது தாய்மொழியில்

கரூரில் தங்கிப்பணிபுரியும் மேற்குவங்க தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அவர்களது தாய்மொழியில் (பெங்காலி) கல்வி கற்பிக்கப்படுகிறது. மேற்குவங்கத்தில் இருந்து பாடப்புத்தகங்கள் வரவழைக்கப்பட்டு போதிக்கப்படுகிறது. மேலும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. 
கரூரில் கொசுவலை உற்பத்தி, வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் மேற்குவங்கம், பிகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் 
குடும்பத்துடன் தங்கிப் பணிபுரிந்து வருகின்றனர். இந்த வெளிமாநில கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி என்பது கேள்விக்குறி. 
இந்நிலையில்,  தமிழக அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற திட்டத்தின் கீழ், ஏழைக் குழந்தைகள் கல்வியைத் தொடர இயலாத நிலையில் அவர்களை மீட்டு மீண்டும்  கல்வியை தொடரச் செய்வது, வறுமை காரணமாக செங்கல் சூளை உள்ளிட்ட உற்பத்தி சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு கல்வி புகட்ட மீண்டும் பள்ளியில் சேர்ப்பது போன்ற  பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 
இந்நிலையில், கரூரில் கொசுவலை உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் மேற்குவங்கம், பிகார் மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் அவர்களது தாய்மொழி மற்றும் பேசும் மொழியாக உள்ள பெங்காலி மொழியில் 
கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதுதவிர தமிழ்ப்பாடத்தையும் அந்த மாணவ, மாணவிகள் விரும்பிக் கற்கிறார்கள். 
இதுதொடர்பாக அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் கூறியது: 
தமிழக அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் மாற்று வழி இணைப்பு மையம் கரூர், தாந்தோணிமலை, அரவக்குறிச்சி ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. இம்மையங்களில் வறுமை உள்ளிட்ட காரணங்களால் பள்ளிப் படிப்பை தொடர முடியாத குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை மீட்டு மீண்டும் பள்ளிப் படிப்பைத் தொடரச் செய்கிறோம். 
இம்மையங்களில் தற்போது கரூரில் கொசுவலை, ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களில் அதிகளவில் பணிபுரியும் மேற்குவங்கம், பிகார் மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் அவர்களது தாய்மொழியில்(பெங்காலி) மொழியில் படிப்பைத் தொடரும் வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளோம். 
கரூரில் சேலம் புறவழிச்சாலையில் சிட்கோ வளாகத்தில் செயல்படும் மையத்தில் 11 குழந்தைகளும், ஷோபிகா டெய்லர்ஸ் விடுதி வளாகத்தில் செயல்படும் மையத்தில் 23 குழந்தைகளும், சணப்பிரட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 32 குழந்தைகளும், உயர்நிலைப்பள்ளியில் 16 குழந்தைகளும் அவர்களது தாய்மொழியான பெங்காலி மொழியில் கல்வி பயின்று வருகிறார்கள். 
இந்தக் குழந்தைகளுக்கு மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.பொய்ஷாகி ஆசிரியை கல்வி கற்றுக்கொடுக்கிறார். இவர் பெங்காலி மொழியிலே அவர்களுக்கு அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களை கற்றுக்கொடுக்கிறார். ஆடல், பாடலுடன் கல்வி கற்றுக்கொடுப்பதால் அப்பள்ளி மாணவ, மாணவிகள் எளிதில் பாடங்களை கற்றுக்கொள்கிறார்கள். 
இவர்களுக்கென மேற்கு வங்கத்தில் இருந்து பெங்காலி பாடப்புத்தகங்கள் வரவழைக்கப்பட்டு ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி போதிக்கப்படுகிறது. 
இவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களும் தமிழ்மொழி வழி ஆசிரியர்களால் கற்றுத்தரப்படுகிறது. 
மேலும், மதிய உணவு, பாடப்புத்தகம், சீருடைகள் என அனைத்தும் தமிழக அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. இப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை பெங்காலி மொழியில் பயிலும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் சொந்த மாநிலத்துக்குச் செல்லும்போது சிரமமின்றி அங்கு கல்வியைத் தொடரும் வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com