டெங்குகாய்ச்சலை தடுக்க  சுற்றுப்புறங்களில் நீர் தேங்காமல் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்

டெங்கு காய்ச்சலைத் தடுக்க பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காதவாறு

டெங்கு காய்ச்சலைத் தடுக்க பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காதவாறு தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன். 
கரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. புலியூர் பேரூராட்சி வெள்ளாளப்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்புபணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் மேலும் கூறியது: 
கரூர் மாவட்டத்தில் டெங்குகாய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் ஊரக பகுதிகளுக்கும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கும், குறுவட்டஅளவிலும் வார்டு வாரியாகவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கண்காணித்திட அலுவலர்கள்  நியமனம் செய்யப்பட்டு அனைத்து பகுதிகளிலும் தீவிர டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
பொதுமக்களுக்கு டெங்குகாய்ச்சல் எவ்வாறு பரவுகின்றது என்பது குறித்தும், டெங்கு வராமல் தடுக்க நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு வருகின்றது.
புலியூர் பேரூராட்சி பகுதியில் டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் 12 நிரந்தர பணியாளர்களும், 25 மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களும், தினக்கூலி அடிப்படையில் 10 பேரும் ஈடுபட்டுள்ளனர். ஒரு பணியாளர் நாள் ஒன்றுக்கு 50 வீடுகள் வீதம் ஒரு நாளைக்கு 500 வீடுகள் ஆய்வு செய்யப்படுகிறது. 
இப் பணியாளர்கள் சுழற்சி முறையில் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.  
டெங்கு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்கள் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குடிநீரை மூடி வைத்து தூய்மையாகப் பயன்படுத்துகிறார்களா என்று ஆய்வு செய்கின்றனர். 
நீர்த்தொட்டிகளில் குளோரின் பவுடர் தெளித்தும், மருந்துகள் தெளித்தும் வருகின்றனர். நீரை முறையாக மூடி வைக்காமல் இருந்தாலோ, சுற்றுப்புறங்களில் நீர் தேங்கியிருந்தாலோ அதுகுறித்து போதிய விழிப்புணர்வு வழங்கி வருகின்றார்கள். ஏடிஸ் கொசு குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டு வருகின்றது.
மேலும் அப்பகுதியில் வழங்கப்படும் குடிநீரில் உள்ள குளோரினேசன் அளவு பரிசோதிக்கப்படுகிறது. 
பொதுமக்களும் தங்களால் இயன்ற அளவு முழு ஒத்துழைப்பு கொடுத்து தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாகப் பராமரிக்க முன்வர வேண்டும். 
தங்கள் வீட்டைச்சுற்றி தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், உடைந்த மண்பானை உள்ளிட்ட தண்ணீர் தேங்கக்கூடிய பொருட்கள் இருந்தால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். குளிர்சாதனப்பெட்டிக்கு பின்புறம் உள்ள பெட்டியில் தேங்கும் நீரை அவ்வப்போது வெளியேற்ற வேண்டும் என்றார்.  
  ஆய்வின்போது புலியூர் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்ரமணி, வட்டாட்சியர் ஈஸ்வரன், மருத்துவர் கார்த்திக், சுகாதார ஆய்வாளர் மணிமேகலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com