கரூர் மென்பொருள் பொறியாளருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: சென்னை சொகுசு விடுதிக்கு உத்தரவு 

கரூர் மென்பொருள் பொறியாளருக்கு பணம் தராமல் இழுத்தடித்த சென்னை சொகுசு விடுதி நிர்வாகம் இழப்பீடாக

கரூர் மென்பொருள் பொறியாளருக்கு பணம் தராமல் இழுத்தடித்த சென்னை சொகுசு விடுதி நிர்வாகம் இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என கரூர் நுகர்வோர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
கரூரை அடுத்த வெள்ளியணை தளியப்பட்டியைச் சேர்ந்தவர் நவநீதநாச்சிமுத்து (39),  ஸ்வீடன் நாட்டில் மென்பொருள் பொறியாளராக உள்ளார்.  சென்னை அடையாறைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சொகுசு விடுதி நிறுவனம் ஒன்று கடந்த 2014-ல் கரூரில் வாடிக்கையாளர் சேவை மையத்தை நடத்தியது. அப்போது புதிய திட்டமாக விடுதிக்கு ரூ. 1.85 லட்சம் செலுத்தினால் 25 ஆண்டுகள் தங்களது சொகுசு விடுதியின் கீழ் செயல்படும் எந்த சொகுசு விடுதியிலும் தங்கிக் கொள்ளலாம், திட்டத்தில் சேர விருப்பமில்லையெனில் 19 நாட்களுக்குள் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. இதையடுத்து நவநீதநாச்சிமுத்து ரூ.18,167-ஐ முதல் கட்டணமாகச் செலுத்தியுள்ளார்.  பின்னர் இத்திட்டத்தில்  சேர விருப்பம் இல்லாத அவர், 8 நாளில் கட்டிய பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டார்.  எனினும் நிர்வாகம் பணத்தை திருப்பிக் கொடுக்காததால் கடந்த 2015-ல் கரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் நவநீதநாச்சிமுத்து வழக்குத் தொடர்ந்தார். 
இதனிடையே இந்த வழக்கை திசைதிருப்பும் வகையில் விடுதி நிர்வாகம்  ரூ.18,167ஐ நவநீதநாச்சிமுத்து வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டோம் எனக் கூறி, அதற்கான ஆவணத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதை நீதிமன்றம் விசாரித்தபோது பணப் பரிவர்த்தனை நடைபெறாதது தெரியவந்தது.  இந்நிலையில் கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி செங்கோட்டையன், சென்னை சொகுசு விடுதி நிர்வாகம் நவநீதநாச்சிமுத்துவுக்கு பணம் தராமல் இழுத்தடித்தால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். எனவே அவருக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் மற்றும் ரூ.18,167-க்கு 9 சதவீத வட்டியுடன் கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com