க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் கட்டப்படுமா?

க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் கட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பில் சமூக ஆர்வலர்கள் உள்ளனர். 

க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் கட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பில் சமூக ஆர்வலர்கள் உள்ளனர். 
 கரூர் மாவட்டத்தின் பரப்பளவில் மிகப்பெரிய ஊராட்சி ஒன்றியமாக க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இந்த ஒன்றியத்தில் அணைப்பாளையம், அஞ்சூர், ஆரியூர், அத்திப்பாளையம், சின்னதாராபுரம், எலவனூர், கூடலூர் கிழக்கு,  கூடலூர் மேற்கு, கார்வழி, காருடையாம்பாளையம், கோடாந்தூர், குப்பம் உள்ளிட்ட 30 ஊராட்சிகள் உள்ளன. மேலும் இந்த ஊராட்சிப் பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த ஒன்றியத்தில் அரசு அலுவலகங்கள்,  மின்சேமிப்பு நிலையம், தனியார் கல்வி நிறுவனங்கள், ஏராளமான கல்குவாரிகள், குவாரிகளில் பாறைகளை உடைக்கப் பயன்படும் வெடிமருந்து குடோன்கள் ஏராளமாக உள்ளன. 
இவற்றில் ஏதாவது நிறுவனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள கரூருக்கோ, வேலாயுதம்பாளையம் அல்லது அரவக்குறிச்சியில் இருந்துதான் தீயணைப்பு வண்டிகள் வரவேண்டியுள்ளது. இதனால் தீயணைப்பு வண்டிகள் வருவதற்குள் சேதங்கள் அதிகமாகிவிடுகிறது. இதுதொடர்பாக அப்பகுதியினர் பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விரைந்து நடவடிக்கை எடுத்து க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியது: க.பரமத்தி பகுதியில் அதிகளவு கல்குவாரிகள் செயல்படுகின்றன. குவாரி பள்ளங்களில் தேங்கிக்கிடக்கும் குட்டைகளில் குழந்தைகள் விழுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இவர்களைக் காப்பாற்ற தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தால்  உயிர்ச்சேதம் ஏற்பட்ட பிறகே வரும் சூழ்நிலை உள்ளது. எனவே க.பரமத்தில் விரைவில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com