செல்லிடபேசியை கையாளும் முறையில்தான் நன்மையும், தீமையும்: சார்பு நீதிபதி பேச்சு

செல்லிடபேசியைக் கையாளும் முறையில் தான் நன்மையும், தீமையும் வருகிறது என்றார் சார்பு நீதிபதி ஆர். தங்கவேல்.

செல்லிடபேசியைக் கையாளும் முறையில் தான் நன்மையும், தீமையும் வருகிறது என்றார் சார்பு நீதிபதி ஆர். தங்கவேல்.
கரூர் அரசு கலைக் கல்லூரியில் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு முகாமிற்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது:
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் செல்லிடபேசி ஒரு பாதுகாப்புக் கருவியாக உள்ளது. அவசர காலங்களில் நமக்கு வேண்டியவரிடம் ஜிபிஎஸ்  மூலம் தொடர்பு கொண்டு  பாதுகாப்பைப் பெறும்போது அது நன்மை தரக்கூடியதாக இருக்கிறது. அதேவேளையில் செல்லிடபேசியில் உள்ள தவறான கருத்துகளை உள்வாங்குவதன் மூலம் தீமை தரக்கூடியதாக அது மாறிவிடுகிறது.  செல்லிடபேசியைக் கையாளும் முறையில்தான் நன்மையும், தீமையும் கிடைக்கிறது. 
நாட்டில் சைபர் கிரைம் அதிகளவில் பரவி வருகிறது. செல்லிடபேசி மூலமே பல அரிய தகவல்கள் திருடப்படுகின்றன. எனவே செல்லிடபேசியைப் பயன்படுத்தும்போது விழிப்போடு இருக்க வேண்டும்.  
 சிசிடிவி கேமரா போலீஸுக்கும், மக்களுக்கும் கிடைத்த வரம் எனக் கூறலாம்.  இந்த கேமரா இருப்பதால் திருட்டுச் சம்பவங்கள் குறைந்துள்ளன.  குற்றம் செய்ய அஞ்சுகிறார்கள்.  உங்களை சிசிடிவி கேமரா மூலம் யாரோ கண்காணிக்கிறார்கள் என மனதில் நினைத்துக்கொண்டால் எந்த குற்றங்களையும் செய்ய மாட்டீர்கள்.  சட்டத்தை இயற்றுவது நாடாளுமன்றமாக இருந்தாலும் கூட சாதாரண அதிகாரிகள் முதல் தலைமைச் செயலர்கள் வரை உள்ளவர்கள்தான் சட்டத்தை செயல்படுத்துகிறார்கள். நம் நாட்டில் மக்களாட்சி நடக்கிறது. மக்களுக்காக சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது. அரசியல் கட்சியினர் வருவார்கள், போவார்கள், ஆட்சி மாறும், காட்சி மாறும்.  
ஆனால் சட்டம் ஒன்று மட்டுமே நிலையானது. குடியரசுத் தலைவர் முதல் சாதாரண குடிமகன் வரை அனைவரும் சட்டத்தின் முன் சமமே. கவர்ச்சி அரசியலுக்கு அடிமையாகி, பணத்திற்கு ஆசைப்பட்டு வாக்குகளை தவறானவர்களுக்கு செலுத்திவிடாதீர்கள். வாக்குகளை சரியான முறையில் செலுத்துங்கள் என்றார் அவர்.   
முகாமில் கரூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் முனைவர் கொ.செந்தில்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் சி. ஜோதிவெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் கேகே. சொக்கலிங்கம், குளோபல் சமூக நலப் பாதுகாப்பு இயக்க மாநில புரவலர் சி. வேலாயுதம், வழக்குரைஞர் ஏ. பாலகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழுவின் எம்.சங்கீதா நன்றி கூறினார்.
முகாமில் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com