துணை மின் நிலையம், ஆயுதப்படை அலுவலகம் திறப்பு

கரூர் மாவட்டத்தில் ரூ. 7.42 கோடியில் துணை மின்நிலையம் மற்றும் ஆயுதப்படை தலைமை அலுவலகத்தை

கரூர் மாவட்டத்தில் ரூ. 7.42 கோடியில் துணை மின்நிலையம் மற்றும் ஆயுதப்படை தலைமை அலுவலகத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். 
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் ரெங்கநாதபுரம் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு 12 கி.மீ. தொலைவில் உள்ள ஆண்டிசெட்டிபாளையம், புகளுர் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இதனால் ரெங்கநாதபுரத்தைச் சுற்றியுள்ள நெடுங்கூர், அத்திபாளையம், கே.பாளையம், வேலம்பாளையம், முன்னூர், மோளபாளையம், க.பரமத்தி, காங்கேயம்பாளையம், புதுக்கநல்லி ஆகிய பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் நிலவியது. இதனால் விவசாய மோட்டார்களும், குடிநீர் பயன்பாட்டில் உள்ள மோட்டார்களும் அடிக்கடி பழுதடையும் நிலை ஏற்பட்டது. 
இந்நிலையை மாற்ற ரெங்கநாதபுரத்தில் புதியதாக  ரூ. 3.63 கோடியில் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது. இதேபோல, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஆயுதப்படைக்கான நிர்வாக தலைமை அலுவலக கட்டடம் ரூ. 3.78 கோடியில் கட்டப்பட்டது.  இக்கட்டடத்தில் காவல் கண்காணிப்பாளர் அறை, காவல் துணை கண்காணிப்பாளர் அறை, கலந்தாய்வுக்கூடம், ஆயுத வைப்பறை, உடற்பயிற்சி கூடம், முடி திருத்தகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த கட்டடம் மற்றும் ரெங்கநாதபுரம் துணை மின்நிலையத்தை  முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். 
தொடர்ந்து ரெங்கநாதபுரத்திலும், காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்திலும் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்,  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (பொ) திஷா மித்தல், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ  ம. கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நிகழ்வில் துணைக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் திரு. விநோதன், செயற்பொறியாளர்கள் சிவக்குமார், செந்தாமரை மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதி ஏ.ஆர். காளியப்பன், மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com