மீண்டும் புத்துயிர் பெறும் கரூர் தாதம்பாளையம் ஏரி! நனவாகும்  விவசாயிகளின்  60 ஆண்டு கனவு

வரும் அக்.1-ம் தேதி வனத்துறை தாதம்பாளையம் ஏரியில் நிறைந்து கிடக்கும் முட்புதர்களை அகற்ற டெண்டர்

வரும் அக்.1-ம் தேதி வனத்துறை தாதம்பாளையம் ஏரியில் நிறைந்து கிடக்கும் முட்புதர்களை அகற்ற டெண்டர் விடப்பட உள்ளதால் ஏரியை தூர்வார  60 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வந்த விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆணைமலை தொடரில் உருவாகும் அமராவதி ஆறு கோவை, ஈரோடு வழியாக கரூர் திருமுக்கூடலூரில் காவிரியுடன் இணைகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் உபரிநீர் வீணாகக் காவிரியில் கலந்து, கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையிலும், கரூர் மாவட்டம் சின்னதாதம்பாளையம், பெரிய தாதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்கவும், விவசாய நிலங்கள் செழிக்கவும் ஆற்றின் குறுக்கே அணைப்பாளையம் என்ற இடத்தில் அப்போதைய ஆங்கிலேய அரசு 1876-ல் தடுப்பணையைக் கட்டியது.  
இதனால் இந்தத் தடுப்பணையில் இருந்து கரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பாசன வசதிகள் பெற பள்ளப்பாளையம் ராஜவாய்க்கால் உருவாக்கப்பட்டது. இந்த வாய்க்கால் மூலம் சுமார் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் பெரியதாதம்பாளையத்தில் 1881-ல் பிரிட்டிஷ் அரசு 420 ஏக்கரில் பெரிய ஏரியை வெட்டியது. இந்த ஏரிக்கு அணைப்பாளையத்தில் இருந்து வாய்க்கால் அமைத்து தண்ணீர் கொண்டு வரப்பட்டது. பின்னர் கரூர் நகர்ப் பகுதியில் ஏற்படும் வறட்சியைச் சமாளிக்க ஏரியின் கிழக்குப்பகுதியில் நீர்போக்கி அமைத்து, அங்கிருந்து கால்வாய்கள் அமைத்து நகரில் ஏற்படும் வறட்சியும் சமாளிக்கப்பட்டது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், அமராவதி நகரில் அமராவதி ஆற்றின் குறுக்கே 1957-ல் நான்கு டிஎம்சி தண்ணீரைச் சேமிக்கும் வகையில் அணை கட்டப்பட்டது. இதனால் ஆற்றில் தொடர்ந்து சென்றுகொண்டிருந்த நீர் வரத்து நிறுத்தப்பட்டு, அணையின் கடைமடைப் பகுதியான கரூர் மாவட்ட பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கான காலங்களில் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் தாதம்பாளையம் ஏரிக்கு வந்துகொண்டிருந்த நீரும் அவ்வப்போது தடைபட்டது.
நாளடைவில் 1970-களில் ஏற்பட்ட கடும் வறட்சியால்  ஆற்றில் முற்றிலும் தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டதன் விளைவால் தாதம்பாளையம் ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால்களிலும் தண்ணீர் வரத்து நின்றுபோனது, பின்னர் தண்ணீர் வரத்தே இல்லாமல் போனதால் வாய்க்கால்களும் தூர்வாரப்படாமல் தூர்ந்துபோனதால் ஏரியை முட்புதர்கள் ஆக்கிரமித்தன.
எப்போதும் கடல்போலக் காட்சியளிக்கும் ஏரி தண்ணீர் இன்றி முள்மரங்களால் நிரம்பி வனமாக மாறியது. 
இதனால் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஏரி வனத்துறையின் கைக்கு மாறியது. இதையடுத்து அமராவதியில் தண்ணீர் பெருக்கெடுத்தோடும் காலங்களில் தாதம்பாளையம் ஏரிக்கு வாய்க்கால் மூலம் நீரை நிரப்ப வேண்டும் எனக் கோரி விவசாயிகள் எடுத்த முயற்சிகள் நிறைவேறவில்லை. 
இதனிடையே கடந்த 2013 மக்களவைத் தேர்தலின்போது தற்போதைய மக்களவை துணைத் தலைவரான மு. தம்பிதுரை போட்டியிட்டபோது அவரிடம் அப்பகுதி விவசாயிகள், தாதம்பாளையம் ஏரியைத் தூர்வாரி நீர் நிரப்ப விடுத்த கோரிக்கையின்படி  அவரும் அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோரை வரவழைத்து ஏரியை பார்வையிட்டு தூர்வாருவதற்கான ஆய்வுப்பணிகள் நடந்தன. இருப்பினும் பணிகள்  தொடங்கவில்லை.
இந்நிலையில் தற்போது இப்பணிகள் தூசி தட்டப்பட்டு துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வரும் அக்.1-ம்தேதி ஏரிக்குள் நிரம்பி பரவிக்கிடக்கும் மரங்களை அகற்ற வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது. 
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தாதம்பாளையம் ஏரியைத் தூர்வார பல ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். தற்போது தமிழக அரசு ஏரியை தூர்வார முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக ஏரியை ஆக்கிரமித்துள்ள முட்புதர்கள் அகற்றப்படுகின்றன. 
இந்த பணிக்காக வரும் அக்.1-ம்தேதி டெண்டர் விட உள்ளோம். இதன் பின்னர் ஏரிக்குள் நிரம்பியுள்ள மண்திட்டுகள் அகற்றப்பட உள்ளன. இதையடுத்து ஏரிக்கு வரும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட உள்ளன என்றார்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகளின் 60 ஆண்டுகாலப் போராட்டத்துக்கு தற்போது விடிவு பிறந்துள்ளது. மாவட்டத்தில் பஞ்சப்பட்டி, தொட்டியப்பட்டி ஏரிகள் அரசு மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. 
இதேபோல தாதம்பாளையம் ஏரியும் தூர்வாரப்பட உள்ளது. தற்போது ஏரியில் மரங்களை அகற்றும் பணி வனத்துறை சார்பில் நடைபெற உள்ளது. அதற்குள் அணைப்பாளையம் முதல் தாதம்பாளையம் ஏரி வரை இடையில் இருக்கும் 26 குளங்களை நிரப்பும் வகையில் ஏற்கெனவே உள்ள வாய்க்கால்களைத் தூர்வார உள்ளோம். இந்தப் பணிகளை குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் செய்ய உள்ளோம். இதற்காக பொதுமக்களின் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே இதற்கான திட்ட மதிப்பீடாக ரூ.35 கோடி உள்ளது. ஒரு சில சமூக ஆர்வலர்கள் பணம் தருவதாகக் கூறியிருக்கிறார்கள். வரும் டிசம்பர் மாதத்திற்குள் இப்பணிகள் அனைத்தும் முடிந்து தாதம்பாளையம் ஏரியில் மழைக்காலங்களில் வீணாகும் காட்டுவாரி நீர், ஆற்றுநீர் என அனைத்து நீரும் சேமிக்கப்படும். 
இதன்மூலம் ஏற்கனவே ஏரி மூலம் பயனடைந்துவந்த சுமார் 35,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.  கரூர் நகரில் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. மேலும் விவசாயிகளின் 60 ஆண்டுகாலப் போராட்டத்திற்கும் முடிவு கிடைத்துள்ளது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com